வெள்ளி, 27 நவம்பர், 2009

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அமைச்சர்

  மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுஃல் படேல் மாத ஊதியமாக ஒரு ரூபாய்  மட்டும்  பெற்று வருகிறார்.   
 
மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு ரூ. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அடிப்படை ஊதியமும், தினசரி படியாக நாளொன்றுக்கு ரூ. 1000, தொகுதிப் படியாக மாதம்தோறும் ரூ. 20 ஆயிரமும் இதர படிகளாக மாதத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. 
 
  இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து பொள்ளாச்சியில் இயங்கிவரும் "தாயகம்' தன்னார்வ அமைப்பின் நா. பாஸ்கரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில மாதங்கள் முன்னர் கேட்டிருந்தார். 
 
  இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன.   உள்துறை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி எஸ். கெüரிசங்கர் அளித்துள்ள பதில் விவரம்:  
 
இணை அமைச்சர் பிரபுஃல் படேல் தனிபட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டபடி அவருக்கான மாத ஊதிய ரூ. 501-ஆக கணக்கிடப்படுகிறது.   ஆனால், இதில் ரூ. 500 மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தில் அவரது பங்களிப்பாக வரவு வைக்கப்பட்டு எஞ்சிய ரூ. 1 மட்டும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 
 
தினப்படியில் குழப்பம்: 
 
மத்திய அமைச்சர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் தினப் படியாக ரூ. 1000 அளிக்கப்படுகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 31 நாள்களுக்கான படியாக ரூ. 31,000 வழங்கப்பட்டுள்ளது. 
 
வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்கு 30 நாள்கள் மட்டுமே என்பதால் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி நா. பாஸ்கரன் அந்தந்த அமைச்சகத்தின் மேல் முறையீட்டு அதிகாரிகளுக்கு தனித்தனியாக மனு செய்தார்.  
 
இதற்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தனித்தனியாக பதில் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு துறையின் துணைச் செயலரும், தலைமை பொதுத் தகவல் அதிகாரியுமான எஸ்.டி. பிள்ளை கடந்த 6-ம் தேதி அளித்த பதில் விவரம்:  
 
இந்தத் துறையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர், இணை அமைச்சர்களுக்கு 30 நாள்கள் கொண்ட மாதத்தில் 31 நாள்களுக்கான தினபடி வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தத் தவறு வருத்தத்திற்குறியது. இருப்பினும், அமைச்சர்களிடம் இருந்து கூடுதல் தொகை திரும்ப பெற இயலாது.
 
வருங்காலங்களில் இத்தகைய தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.  
 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதன் விளைவாக இந்தத் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக