தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் ஊழல் அதிகாரிகள் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறை தர வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2005-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு நிர்வாகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பெறுவது எளிதானது.
ஆனால், இந்த சட்டத்தின்படி கோரப்படும் தகவல்களை அளிப்பதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு 2008 ஆகஸ்ட் 26-ம் தேதி உத்தரவிட்டது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் இதற்கான அரசாணை (எண்: 158) பிறப்பிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை பணிகளுடன் தொடர்புடைய துறைகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டிய விலக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஆர்வலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் பணிகள் குறித்து சில தகவல்களை கேட்டு போரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவ், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார்.
தங்கள் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பதில் அளிக்க இயலாது என்று கூறி மனுவை லஞ்ச ஒழிப்புத் துறை நிராகரித்தது.
இது தொடர்பாக மாதவ், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த 2-வது மேல்முறையீட்டு மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
தகவல் ஆணையம் உத்தரவு:
மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், தகவல் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் "தகவல் பெறும் உரிமைச் சட்டம் 8 (1) (எச்) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட தகவல்களைத் தவிர்த்து, மற்ற தகவல்களை தர மறுக்கக் கூடாது' என்றனர்.
எனவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பதில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது செல்லாததாகிவிட்டது என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு வழக்கு:
இதேபோல, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான மனுவை தகவல் ஆணையர் ஆர்.பெருமாள்சாமி அண்மையில் விசாரித்தார்.
இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், தகவல் அளிக்க மறுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பொது தகவல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து தகவல் ஆணையர் பெருமாள்சாமி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக