ஞாயிறு, 15 நவம்பர், 2009

அட்டைப் பள்ளத்தாக்கின் அதிசயம்!



"அந்நியன்' திரைப்படத்தில் பேராசைக்காரனை அட்டையைவிட்டு  ரத்தம் உறிய வைத்துக் கொலை செய்வார் கதாநாயகன். ஆனால், ஒரு பாவமும் அறியாமல் அடர் காட்டில் அட்டைகளோடு பயணம் செய்துவிட்டுத் திரும்பினோம். எங்கே? ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு அடுத்தடுத்த பாராவில் விடை.
 
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு நகரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா. சிங்கவால் குரங்குகளின் பிரதான வாழிடம், யானைகளின் வழித்தடத்தின் இறுதி பகுதி ஆகிய சிறப்பம்சங்கள் இதற்கு உண்டு.
 
22 வகை விலங் கினங்கள், 211 வகை பறவையினங்கள், அட்டைப் பூச்சியினங்கள், ஏராளமான தாவர வகைகள் உள்பட 1000-க்கும் மேற் பட்ட உயிரினங்களின் வாழிடமாக இந்த அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. 
 
நீர்மின் நிலையம் அமைக்க அணை கட்டும் திட்டத்துக்காக அழிக்கப்பட இருந்த நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் மத்திய அரசு வற்புறுத்தல் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக புதுவாழ்வு பெற்றுள்ளது. 
 
இதன் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையினர் அனுமதியுடன், பயணம் செய்தபோதுதான் இந்த அட்டை உலா. மன்னார்காடு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்காலி பகுதியில் இருந்து நமது பயணம் தொடங்குகிறது. 
 
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை மினி வேனில் பயணித்துவிட்டு, பந்தன்தோடு ஓடையை கடக் கிறோம். அதன் பிறகு சில கிலோமீட்டர் தூரத்தில் பவானியின் கிளை ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. 
 
ஆற்றைக் கடக்கும் முன்னர் ஓரிருவரின் காலை மட்டுமே பதம்பார்த்த அட்டைகள் இப்போது அனைவரது கால்களிலும் சடசடவென ஏறத் தொடங்கின. மரங்களில் இருந்து உதிரும் இலைகள், அட்டை பூச்சிகளால் அங்கேயே இருக்க வைக்கப்படுகின்றன. இதனால் இலைகளும், தழைகளும் உரமாகி செடிகளும் மரங்களும் செழித்து வளர்கின்றன.
 
விவசாய நிலத்தில் மண் புழுக்கள் ஆற்றும் அரும்பணிக்கு நிகராக மழைக்காடுகளில் மரங்களும், புதர்களும் நிறைந்த பகுதிகளில் தரைபரப்பில் ஈரப்பதத்தை அப்படியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வதே அட்டைப் பூச்சிகளின் தலையாயப் பணி என நம்முடன் பயணித்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சதீஷ் சந்திரன் நாயர் குறிப்பிட்டார். 
 
அமைதி பள்ளத்தாக்கின் மற்றொரு சிறப்பு, இங்கு ஆண்டுக்கு 4,500 மி.மீ. முதல் அதிகபட்சமாக 7,500 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்தியாவில் வேறு எந்த வனப்பகுதிக்கும் இல்லாத சிறப்பு இது. நடைபயணத்தின் நடுநடுவே சதீஷ் சந்திரன் நாயரின் ஆராய்ச்சி கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அட்டைகள் அசராமல் ரத்தம் உறிஞ்சும் பணியில் கர்மசிரத்தையாக ஈடுபட்டிருந்தன. 
 
இந்த இடத்தில் அட்டைகள் குறித்து சில விஷயங்களை சொல்லியாக வேண்டும், மனிதர்களிடம் இருந்து ரத்தம் உறிஞ்சுபவை என்ற அளவில் மட்டுமே அட்டைகள் குறித்த பரிச்சயம் நமக்கு இருக்கும். 
 
ஆனால், அதைத் தாண்டி அட்டைகள் ஆற்றும் அரும்பணி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் லீச்சஸ் என அழைக்கப்படும் இந்த அட்டை பூச்சிகள் சராசரியாக ஒரு அங்குலம் நீளத்தில் கறுப்பும் காப்பி கலரும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும். 
 
பொதுவாக இவை மனிதர்களைக் கடிக்கும் முன் ஹருடின் என்ற சுரப்பை முதலில் செலுத்தும். அதன் பின்னர் அது ரத்தத்தை உறிஞ்சும்போது, நமக்கு எந்த வலியும் ஏற்படாது. தனது உடலில் இடம் உள்ள அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சிய பிறகு அட்டைகள் தானாக விழுந்துவிடும்.
 
ஆனால், அது உறிஞ்சிய இடத்தில் ரத்தம் வடிவது நிற்க 5, 10 நிமிடங்கள் ஆகும். இந்தக் கருத்து பரிமாற்றங்களுடன் நடந்ததில் 4 கிலோ மீட்டர் தொலைவை கடந்ததே தெரியவில்லை. 
 
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்த நாம் அங்கிருந்து, சைரேந்திரி வனம் அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதியை அடைந்தோம். 
 
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து, அமைதி பள்ளத்தாக்கில் உள்ள குந்திபுழாவில் அணை கட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாரை சாரையாக அட்டைகள் அதன் மீது ஊர்ந்து கொண்டு, இலைகளைக் காய்ந்து போகவிடாமல் ஈரப்பதத்துடன் அங்கேயே இருக்கச் செய்வதால் மழைக்காடுகளின் பாதுகாப்பில் அட்டைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
 
வனத்துக்கு உதவும் அட்டைகள் மனிதர்களுக்கும் உதவுவது ஆச்சர்யமளிக்கும். மனிதர்களுக்கும் ரத்தம் கட்டிவிட்டால் அதைச் சரி செய்வதில் அட்டைகள் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இதனை பயன்படுத்தியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 
 
 
பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறப்படும் குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளிலும், குற்ற வழக்கு புலனாய்வில் ரத்த அடையாளங்கள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அட்டைகளே பயன்படுகின்றன. மேலும், பல நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் அட்டைகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
 
இந்தப் பகுதி இன்னமும் மழைக்காடு வகை வனமாக இருப்பதற்கு காவலாக அட்டைப் பூச்சிகள் செயல்படுகின்றன என்றால் அது மிகையல்ல.
 
 
சிலரைச் சாடும்போது அட்டை போல உறிஞ்சுகிறான் என்பார்கள்... அட்டைபோல அவன் இவ்வளவு சேவைகள் செய்திருப்பானா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். 
 
                                                                                                                   வி. கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக