சனி, 14 நவம்பர், 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.


  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.


  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.


  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.


  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.


  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.


  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.


  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?


  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?



  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.



  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக