புதன், 26 டிசம்பர், 2012

குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி, நகர்ப்புற திட்டங்களுக்குநிலங்களை கையகப்படுத்துவதில், புது நடைமுறை

குஜராத் மாநிலத்தைப் பின்பற்றி, நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில், புது நடைமுறையை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை அதிகரிப்பு:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 48.44 சதவீதம் பேர், நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்றனர். அடுத்த சில ஆண்டுகளில், இது, 55 சதவீதமாகஅதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப் படவில்லை. நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பேருந்து நிறுத்தங்கள் அமைப்பது; மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறவழிச்சாலைகள் போன்ற திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை, தனியாரிடம் இருந்து கையகப்படுத்துவதில், ஏற்படும் சிக்கல்களே, இதில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
குஜராத் வழியில்...:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நகர்ப்புற வளச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் கடைபிடிக்கும் நடைமுறைகள், நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளன. அங்கு முழுமை திட்டத்துக்கு அடுத்தபடியாக, நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம்உருவாக்கப்படுகிறது.எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் கண்டறியப்பட்டு, சர்வே எண்கள் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன.இதில், அரசு திட்டத்துக்கு தேவையான அளவு போக, மீதியுள்ள நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கே சீரமைக்கப்பட்ட மனைகளாக திருப்பித் தரப்படுகின்றன.இதனால், மேம்பாட்டுத் திட்டத்தால் தாங்கள் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம்தீர்க்கப்பட்டு, தேவையான நிலங்கள், எவ்வித சிக்கலும் இன்றி கையகப் படுத்தப் பட்டு பயன்படுத்தப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன், அங்கு சென்று, இத்திட்டத்தை ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இது குறித்த, விவர அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்தனர்.இதே சமயத்தில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் குழு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் எடுக்க, இதற்கென நில தொகுப்புகளை உருவாக்கலாம் என்று சிபாரிசு செய்துள்ளது.இதற்காக நகரமைப்பு சட்டத்தின், "36அ' பிரிவில் உட்பிரிவு ஒன்றை சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது.

புதிய நடைமுறை:
இது குறித்து, நகரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதன்படி, நகர்ப்புறப்பகுதிகளில் எதிர்காலதிட்டங்களுக்கு தேவையான நிலங்களை கண்டறிந்து, அது குறித்த சர்வே எண்கள் அடங்கிய ஒரு தொகுப்பை உருவாக்கப்படும்.அதில் தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடமேதிரும்ப அளிக்கலாம்.மேலும், வருவாய்த்துறையை சார்ந்திராமல், நகரமைப்புத்துறை மூலமே நிலங்களை விரைந்து கையகப்படுத்தலாம்.மேலும், புதிய மனைப்பிரிவு, குடியிருப்புத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் நிலையிலேயே, எதிர்கால திட்டங்களுக்கான நிலங்கள்,கண்டறியப்பட்டு கையகப் படுத்தப்படும்.இதன் அடிப்படையில், நிலத்தொகுப்புகளை உருவாக்குவதற்கான வரைவுத்திட்ட அறிக்கை, நகரமைப்புத்துறை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த அறிக்கை சட்டத்துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.அதன் ஒப்புதல் கிடைத்தவுடன், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் அரசாணையாக வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 29 நவம்பர், 2012

ஒரு லோடு மணல், 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் !

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஒரு கன அடி, 70 ரூபாய் வரை உயர்ந்த, மணல் விலை, நேற்று திடீரென, 38 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு லோடு மணல், 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்ட, குவாரிகள் இயங்க தடை என, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவால், 27 குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கின. இதனால், 96 குவாரிகள் மூலம் பெறப்பட்ட மணலை, 30க்கும் குறைவான குவாரிகளில் இருந்து பெற வேண்டிய நிலை கட்டுமான துறைக்கு ஏற்பட்டது.


தட்டுப்பாடு
யார்டுகளில் மணல் கிடைப்பதில் தாமதமாவதால், ஒரு லோடுக்கு செல்லும் லாரிகள், நான்கு முதல் ஆறு நாள்கள் வரை வெளியிடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.இதனால் ஏற்படும், லாரி வாடகை, பணியாளர் ஊதியம், உணவு படி போன்றவை மணல் விலையிலேயே சேர்க்கப்படுவதால், அதன் விலை தொட முடியாத உயரத்துக்கு சென்றது.


கடந்த சில மாதங்கள் வரை, ஒரு கன அடி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல், தற்போதைய நிலவரப்படி, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட், 7,000 ரூபாய்க்கும், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 18 முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதில் நான்கு யூனிட் கொண்ட, ஒரு லோடு மணல் விலை, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தும், ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டது.



திடீர் விலை குறைப்பு
இந்நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று நண்பகல் முதல் மணல்விலை அதிரடியாக குறைந்தது.இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:நேற்று காலை முதல், குவாரிகளில் மணல் எடுப்பதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாயிலிருந்து, 38 ரூபாயாக குறைந்தது. குறிப்பிட்ட சில இடங்களில் இது, 40 ரூபாயாக உள்ளது.



இதனால், 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலின் விலை, 10,000 ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது. முன்பு, இந்த விலை, 20,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. 4 முதல் 5 யூனிட்கள் வரை கொண்ட லோடு விலை, 20 முதல் 25 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.



பின்னணி என்ன?
மணல் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது குறித்தும், இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், "தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.கட்டுமானத் துறையினர், மாநிலம் தழுவிய போராட்டம் என்று விபரீத சூழலை நோக்கி செல்வதை தடுக்க,

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.


இதன்படி, குவாரிகளில் காலை, 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையே, மணல் எடுக்க இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதேபோல, பெரிய லாரிகளில், அதிகளவில் மணல் எடுக்கப்படுவதை தடுக்க, லாரியின் மொத்த எடை, 24 டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.தற்போது, இக்கட்டுப்பாடுகள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகள் மூலம் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், 24 மணி நேரமும் மணல் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் லாரிகளில் ஏற்றப்படும் எடை கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

மியான்மர் ஐராவதி ஆற்று மணல் தமிழகத்தில் இறக்குமதி : கட்டுமான நிறுவனங்கள் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் கடும் மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில், மணல் குவாரிகள் அரசுடைமை ஆக்கப்பட்டிருந்தாலும், மணல் எடுப்பதிலும், குவாரிகளை பயன்படுத்துவது தொடர்பான கோர்ட் உத்தரவுகளால், ஏராளமான குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு கன அடி மணல் விலை, 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

கம்போடியாவில்... : இந்த அசாதாரண சூழலை சமாளிக்கும் விதமாக, சில கட்டுமான நிறுவனங்கள், கம்போடியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கு, ஆற்றுமணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இது சாத்தியமாவது சிக்கலாகியுள்ளது.
அப்படியே, கம்போடியாவில் ஒரு கன அடி மணல், 12 ரூபாய்க்கு கிடைத்தாலும், இறக்குமதி செய்யும் போது போக்குவரத்து செலவுகளையும் சேர்த்தால், சென்னைக்கு வரும் போது, அதன் விலை, 60 ரூபாயை எட்டும் என்பதாலும், இதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

மியான்மரில்... : இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மணல் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றான, மியான்மரில் இருந்து, தமிழகத்துக்கு தேவையான மணலை இறக்குமதி செய்வது குறித்து, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. ஆற்று மணல் ஏற்றுமதிக்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதால், இது சாத்தியமாவதில் சிக்கல் இருக்காது. மேலும், மணல் இறக்குமதிக்கு இதுவரை, கம்போடியாவை நம்பியிருந்த, சிங்கப்பூர் போன்ற நாடுகளும், தற்போது மியான்மர் பக்கம் திரும்பியுள்ளன.
கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, அதிகரித்து வரும் மணல் தேவையை கருத்தில் கொண்டு, மியான்மரில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்ய, சென்னையை சேர்ந்த, ஒரு தனியார் நிறுவனம் முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆலோசனை : இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல கட்டுமான நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், மியான்மரில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் ஐராவதி நதி படுகையில் இருந்து, அதிக அளவில் மணல் கிடைப்பதால், ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்குள்ள பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழகத்துக்கு மணல் அனுப்ப தயாராக உள்ளன. ஒரு கப்பலில், 15 ஆயிரம் டன் முதல், 20 ஆயிரம் டன் வரை கொண்டு வரமுடியும். அதுவும், மியான்மரில் இருந்து, நான்கு நாட்களில் ஒரு கப்பல், சென்னைக்கு வர முடியும் என்பதால், இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. இதனால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகமாக இருக்காது.

உரிமம் வேண்டும் : ஆனால், நம் நாட்டை பொறுத்தவரை, இறக்குமதி செய்யும் பொருள்கள் பட்டியலில் மணல் இல்லை. எனவே, தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மணல் இறக்குமதி செய்ய வேண்டுமானால், இதற்கு மத்திய நிதித் துறையிடமிருந்து, எஸ்.ஐ.எல்., எனப்படும் சிறப்பு இறக்குமதி உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இப்பணிகள் முடிந்துவிட்டால் மணல் இறக்குமதி சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு லோடு மணல், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது!

எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில், 1 கன அடி மணல் விலை, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லோடு மணல், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியாரின் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆற்றுப் படுகைகள், சென்னை, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் மணல் எடுக்க, அனுமதி அளிக்கப்படுகிறது.
இங்குள்ள அதிகாரிகளிடம், 2 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலுக்கு, 626 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, மணல் எடுத்துச் செல்லலாம் என்பது, அரசு விதி.ஆனால், ஒவ்வொரு லாரி உரிமையாளரும், இப்படி ரசீது வாங்கி மணல் அள்ள முடியாது; மேலும், எடுத்துக் கொட்டுவதற்கு தேவையான இயந்திர மற்றும் பணியாளர் வசதி, எல்லாரிடமும் இருக்காது என்பதால், குவாரிகளில் இருந்து மணலை எடுத்து, யார்டுக்கு கொண்டு வரும் பணியை மட்டும் செய்வதாக, தனியார் சிலர், இந்தத் தொழிலில் உள்ளே நுழைந்தனர்.நாளடைவில், குவாரிகள் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதிலிருந்து மணல் எடுத்து, யார்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மணல் லாரிகளுக்கு விற்பதில், தனியாரின் ஆதிக்கம் தலை விரித்தாட துவங்கியுள்ளது. இதனால், குவாரிகளில், அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதும், கூடுதல் விலைக்கு விற்பதும் அதிகரித்தது.
கட்டுப்பாடுகள்
இந்நிலையில், பாலாறு, காவிரி, தாமிரபரணி ஆகிய, முக்கிய ஆற்றுப் படுகைகளில், அளவுக்கதிகமாக மணல் அள்ளப்படுவதாகக் கூறி, தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட், "பொக்லைன்' இயந்திரத்தை பயன்படுத்தி மணல் அள்ள, தடை விதித்தது.இயந்திரங்கள் பயன்படுத்த தடை ஏற்பட்டதால், ஒரு யூனிட்டுக்கு, 313 ரூபாய்க்கு ரசீது பெற்று, பணியாளர்கள் மூலம், மணல் அள்ளப்பட்டு, டிராக்டர் மூலம், கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம், மண் லாரிகளில் ஏற்றப்பட்டு, யார்டுகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு, மூன்று முறை இடம் மாற்றப்பட்டு, அதன் பிறகே, லாரிகளுக்கு மணல் கிடைக்கிறது. அள்ளும் பணியாளர் கூலி உள்பட, இட மாற்றத்துக்கு ஆகும் செலவை, இப்பணியை மேற்கொள்ளும் தனியார், மணல் விலையிலேயே சேர்த்து விடுகின்றனர். இதனால், ஒரு யூனிட் விலையில், 2,000 ரூபாய் வரை கூடுதல் தொகையை, லாரி உரிமையாளர்கள் தர வேண்டியிருக்கிறது.
புதிய தடை
இதையடுத்து, மேலும் ஒரு பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஐந்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த, 27 குவாரிகளுக்கு தடை விதித்து, ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்கள் படி, புதிய குவாரிகளை திறக்க, நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. திருச்சி மண்டலத்தில், கரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் செயல்பட்ட, மணல் குவாரிகள் அனைத்தும், மூடப்பட்டன. பிற மண்டலங்களிலும், பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டன.
தட்டுப்பாடு

இதனால், 96 குவாரிகள் மூலம் பெறப்பட்ட மணலை, 30க்கும் குறைவான குவாரிகளில் இருந்து, பெற வேண்டிய நிலை, கட்டுமான துறைக்கு ஏற்பட்டுள்ளது. இயந்திர தடையால் ஏற்பட்ட கூடுதல் செலவுடன், 27 குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும், கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யார்டுகளில் மணல் கிடைப்பதில் தாமதமாவதால், ஒரு லோடுக்கு செல்லும் லாரிகள், நான்கு முதல் ஆறு நாள்கள் வரை, வெளியிடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் லாரி வாடகை, பணியாளர் ஊதியம், உணவுப் படி போன்றவை, மணல் விலையிலேயே சேர்க்கப்படுவதால், அதன் விலை, தொட முடியாத உயரத்துக்குசென்றுள்ளது.
கடந்த சில மாதங்கள் வரை, 1 கன அடி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல், தற்போதைய நிலவரப்படி, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட், 7,000 ரூபாய்க்கும்; 2.5 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 18 முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதில், 4 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் விலை, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
போராட்டம்

இந்த விலை உயர்வால், தமிழகம் முழுவதும், அரசு திட்டங்கள் மற்றும் தனியாரின் வீடு கட்டும் திட்டங்களுக்கான கட்டுமான பணிகள், முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது."இப்பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணவும், நியாயமான விலையில் மணல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசை, பல்வேறு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம், சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவும், இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
அரசு நடவடிக்கை என்ன?
இது குறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மணல் தட்டுப்பாடு பிரச்னை துவங்கியவுடன், செப்டம்பர் மாதமே, முதல்வர் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.இதன்படி, மூடப்பட்ட குவாரிகளில், மணல் வளம் அதிகம் உள்ள, 20 இடங்களிலும், மேலும், 40 இடங்களில், புதிய குவாரிகளை திறக்கவும், முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு குழுவிடம் விண்ணப்பிக்கப் பட்டது. இக்குழு முதலில், 10 குவாரிகளை திறக்க, அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மேலும், 11 குவாரிகளை திறக்கவும், இப்போது அனுமதி கிடைத்துள்ளது.இதில் பெரும்பாலான குவாரிகள், திருச்சி மண்டலத்தில் அமைந்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் மணல் தட்டுப்பாடு நீங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய குவாரிகளை திறக்கவேண்டும்

மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர், பன்னீர் செல்வம் கூறியதாவது:மணல் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் எண்ணிக்கையில், புதிய குவாரிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இது மட்டுமே முழுமையான தீர்வாகி விடாது.குவாரிகளில் இருந்து மண் அள்ளுவது, அதை யார்டு பகுதிக்கு கொண்டு வருவது, அங்கிருந்து லாரிகளுக்கு மணல் விற்பது வரை, அனைத்து பணிகளையும், அரசே ஏற்று நடத்த வேண்டும்.மணல் லாரி உரிமையாளர்களிடம் இருந்து, அவர்களின் தேவை அடிப்படையில் முன்கூட்டியே கட்டணங்களை வசூலித்து, அதற்கான டோக்கன்களை வழங்கலாம். இதன் மூலம், ஒரு குவாரியில் இருந்து, எத்தனை பேருக்கு, எவ்வளவு யூனிட் மணல் விற்பனை செய்யப் பட்டிருக்கிறது என்பது, வெளிப்படையாக இருக்கும்.
இதற்காக, "டாஸ்மாக்' போன்று, தனியாக, ஒரு பொதுத் துறை நிறுவனத்தை அமைக்கலாம். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதுடன், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், "ஆன்லைன்' முறையில், வெளிப்படையான நிர்வாகத்தில், மணல் விற்பனை நடைபெறுகிறது.தமிழகத்தில் இதை செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு மணல் லாரி உரிமையாளர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.














சனி, 3 நவம்பர், 2012

விதிமீறல் கட்டடங்கள்: வரன்முறைப்படுத்த வழிகாட்டி விதிமுறைகள் வெளியீடு


சி.எம்.டி.ஏ.,வில் நகரமைப்பு பட்டதாரிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்குமா?

சி.எம்.டி.ஏ.,வில் புதிய திட்ட அதிகாரிகள் தேர்வில், நகரமைப்பு பட்டதாரிகளுக்கான விகிதத்தை 1:3 ஆக அதிகரிப்பது தொடர்பாக பணி விதிகளில் மாற்றம் செய்வதற்கான கோப்பு, அரசின் ஒப்புதலுக்காக, 10 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கூடுதல் எண்ணிக்கையில் நகரமைப்பு பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., நகரமைப்பு துறை இயக்குனரகம் (டி.டி.சி.பி.,), வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகிய அலுவலகங்களில் நகரமைப்பு வல்லுனர்களின் பணி அவசியமாகிறது.கட்டுமான பொறியியல் உள்ளிட்ட நகரமைப்பு சார்ந்த துறையில் பட்டமும், நகர்ப்புற திட்டமிடலில் பட்ட மேற்படிப்பும் முடித்தவர்களே நகரமைப்பு வல்லுனர் பதவியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானோர் இல்லை:இதுகுறித்து, இந்திய நகரமைப்பு திட்ட நிறுவனம் (ஐ.டி.பி.ஐ.,) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த விவரம்:தமிழகத்தில் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக துறையில் பணியாற்றுகின்ற உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் தகுதி வாய்ந்த நகரமைப்பு திட்ட வல்லுனர்களாக உள்ளனர். சி.எம்.டி.ஏ.,வில் உள்ள, 72 நகரமைப்பு வல்லுனர்களில், 32 பேர் போதிய தகுதியற்றோராக உள்ளனர். தமிழக மாநகராட்சிகளில், 10 சதவீத நகரமைப்பு திட்ட வல்லுனர்களே தகுதி வாய்ந்தவர்கள் என, இந்திய நகரமைப்பு திட்ட நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த, 1980ம் ஆண்டு வகுக்கப்பட்ட பணி விதிகளின் படி தேர்வு நடைமுறைகள் மாற்றப்படாததால், சி.எம்.டி.ஏ.,வில், நகரமைப்பு பட்டதாரிகளை காட்டிலும், முதுநிலை பட்டயம் படித்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.இந்த பழைய நடைமுறையின் படி, 1:1 என்ற விகிதத்தில்பட்டயம் முடித்தவர்களும், பட்டதாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்போதைய சூழலில் பட்டதாரிகள் அதிகம் இல்லை என்பதால், பட்டயம் முடித்தவர்களுக்கு சமவிகிதத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்தது.

பாதிப்பு என்ன?:இதுகுறித்து, தொழில் முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சதானந்த் கூறியதாவது:
பட்டயம் முடித்து வந்தவர்களில் பெரும்பாலோர், திட்ட அனுமதி வழங்கல் தொடர்பான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவதால்,
நகர்ப்புற மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் உருவாக்குவது பாதிக்கப்படுகிறது.எனவே, நகரமைப்பு துறை, பட்டதாரிகளை அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்வதன் மூலம், புதிய திட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்தலாம்.நாடு முழுவதும் பட்டதாரிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படு கின்றனர். ஆனால், சி.எம்.டி.ஏ.,வில் மட்டும் பழைய பணி விதிகளின் அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில் புதியதிட்ட அதிகாரிகள் தேர்வில், 1:1 என்ற விகிதத்தில் பட்டயம் முடித்தோரும், பட்டதாரிகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விகிதத்தை 1:3 என மாற்றுவது தொடர்பாக, 2002ல், ஆய்வு செய்ய உறுப்பினர் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உதவி திட்ட அதிகாரி தேர்வு மற்றும் பதவி உயர்வில் பட்டயம் பெற்றோர், பட்டதாரிகள் இடையிலான விகிதத்தை, 1:3 ஆக மாற்ற முடிவு செய்யப்பட்டது.இதற்காக பணி விதிகளில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பான வரைவு அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசிடமிருந்து, இதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





தமிழக வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மோசடி

வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை, மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் ஒவ்வொரு திட்டப்பகுதியிலும், குறிப்பிட்ட அளவு நிலம் இருப்பு வைக்கப்படும். இத்தகைய நிலங்களை அந்தந்த கோட்டங்களில் உள்ள அதிகாரிகள், முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக அரசுக்கும், வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன.

இப்புகார்கள் குறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கோவையில் கணபதி திட்டப்பகுதியில் ஏழு, எட்டு ஆகிய பிரிவுகளில், எதிர்கால திட்டங்களுக்கு என, ஒதுக்கப்பட்ட, 100 சென்ட் நிலம், மனைகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நபர்களுக்கு மோசடியாக விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இத் திட்டப் பகுதிக்கு பொறுப்பாளாக இருந்த செயற்பொறியாளர் ராமமூர்த்தியும், அவருக்கு கீழ் பணி புரிந்த மூன்று பேரும் அண்மையில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

"தினமலர்' எதிரொலி:இது தொடர்பான செய்தி, கடந்த மாதம், 12ம் தேதி, "தினமலர்' நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, நிலமோசடி தொடர்பான புகார்களில் சிக்கிய, மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, வீட்டுவசதி வாரிய உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.இதையடுத்து, கோவை, மதுரை, வேலூர், நெல்லை போன்ற கோட்டங்களில் நடந்த நிலமோசடி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளன.

ஆதாரங்கள் அழிப்பு:கோவையில் அண்ணாநகர் பிரிவில், இடையர் பாளையம் பகுதியில், 70 சென்ட் நிலம், எவ்வித அறிவிப்பும் இன்றி, கோட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உறவினர்கள், அவர்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதே போல, மேட்டுப்பாளையம் சிக்கதாசன் பாளையம் பகுதியில், 60 சென்ட் நிலம், உள்ளூர் அளவிலேயே விற்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிக்கப் பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான சந்தேகம் வலுவடைந்து உள்ளது.

விரைவில் நடவடிக்கை:இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வீட்டு வசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், பல்வேறு கோட்டங்களில் நடந்ததாக கூறப்படும், நில மோசடி தொடர்பான புகார்கள் மீதான விசாரணை, முடுக்கி விடப் பட்டுள்ளது. ஏற்கெனவே சிலர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் சில அதிகாரிகள், நிலமோசடியில் ஈடுபட்டுள்ளது கவனத்துக்கு வந்துள்ளது. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வீட்டுவசதிவாரிய வீடு, மனைகளின் விலை அதிகரிப்பு : வழிகாட்டி மதிப்பு உயர்வே காரணம்

வழிகாட்டி மதிப்பு உயர்வு அடிப்படையில், வீட்டுவசதி வாரியத்தின் விற்பனையாகாத மற்றும் புதிய வீடுகள், மனைகளின் விலைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை வாங்குவோருக்கான செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான அரசின் திருத்தியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள், கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
முன் எப்போதும் இல்லாத வகையில், பெரும்பாலான இடங்களில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை வழிகாட்டி மதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், வீடு, மனைகளின் சந்தை மதிப்பும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பு அதிகம் : பல்வேறு இடங்களில், இப்போதைய சந்தை மதிப்பைவிட அதிகபட்சமாக இருக்கும் வகையில், வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வை தொடர்ந்து, தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களில் வீடு, மனைகளில் விலையை நிர்ணயிக்கும்போது, வழிகாட்டி மதிப்பு உயர்வை கருத்தில் கொண்டு, அதிகபட்ச அளவில் நிர்ணயிக்கத் துவங்கியுள்ளன.
இதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், புதிதாக விற்பனை செய்ய உள்ள வீடு, மனைகளின் விலையை உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

தீர்மானங்கள் : அண்மையில் நடந்த வீட்டுவசதி வாரிய கூட்டத்தில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
வாரியத்தின் அனைத்து கோட்டங்கள், பிரிவுகளில் விற்பனையாகாத குடியிருப்பு மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக மனைகளுக்கு, 2012-13ம் நிதி ஆண்டிற்கான விலை நிர்ணயம் தொடர்பாக, அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
விற்பனையாகாத வீடுகள் மற்றும் மனைகளின் தற்போதைய சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய விற்பனை விலையை நிர்ணயம் செய்யலாம்.
வாரிய அதிகாரிகளின் அறிக்கை பெறப்படாத திட்டங்களுக்கு இப்போதைய சந்தை விலை, வழிகாட்டி மதிப்பு, வாரியம் ஏற்கனவே நிர்ணயித்த நடைமுறை விலை ஆகியவற்றை ஆய்வு செய்து, இதில் எது அதிகமோ, அதை தற்போதைய விற்பனைக்கான விலையாக நிர்ணயிப்பது என்ற விலை நிர்ணயக்குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால்... : சந்தை விலை, வழிகாட்டி மதிப்பைவிட வாரியத்தின் நடைமுறை விலை அதிகமாக உள்ள இடங்களில், நடைமுறை விலையையே வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.
நடைமுறை விலை, சந்தை விலையைவிட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், இப்போதைய வழிகாட்டி மதிப்பை வாரியத்தின் விற்பனைக்கான ஆரம்ப விலையாக நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 சதவீதம் வரை அதிகரிக்கும் : இத்தீர்மானத்தின்படி, வீட்டுவசதி வாரியத்தால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள வீடு, மனைகளின் விலைகள் முந்தைய விலையைவிட, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்போது புதிதாக உருவாக்கப்பட்டு, குலுக்கல் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் வீடு, மனைகளின் விலையையும், புதிய வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் மறு ஆய்வு செய்து, புதிதாக நிர்ணயிக்க வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீட்டுவசதி வாரியத்தின் இந்நடவடிக்கையால், குலுக்கல் முறையில் வீடு வாங்க விரும்புவோர், கடந்த ஆண்டு நிலவரத்தை காட்டிலும் கூடுதலாக, 20 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 ஜூன், 2012

ஊழல் வழக்குகளை பதிவு செய்ய நிபந்தனைகள்

ஊழல் வழக்குகளில் பூர்வாங்க விசாரணையில், முழு விவரங்கள் தெரியவந்தாலும், விரிவான விசாரணைக்கு பிறகே, வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் எளிதில் தப்பிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உருவாக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளை கொண்டிருந்தாலும், இப்பிரிவானது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஊழல் புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துவதற்கான அளவுகோல் குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் இருந்து, கடந்த மாதம் 22ம் தேதி அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைமை அதிகாரிகள், தலைமை செயலக அனைத்துத் துறை தலைமை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதத்தின் விவரம்
ஊழல் புகார்கள் தொடர்பாக, பூர்வாங்க மற்றும் விரிவான விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உத்தரவிடுவது தொடர்பாக, இதுவரை எந்த அளவுகோலும் இல்லை. இதை கருத்தில் கொண்டு, இத்தகைய விசாரணைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றன.இதில் பூர்வாங்க விசாரணையை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பாக, ஐந்து அடிப்படை விதிமுறைகளும், விரிவான விசாரணை தொடர்பாக, ஆறு விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்படி, ஒரு நேர்மையான அதிகாரி மீது யாராவது ஊழல் புகார் தெரிவித்தால், அது தொடர்பாக அந்த அதிகாரியின் நற்பெயருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவரது நடத்தை குறித்து, கடிதம் உள்ளிட்ட எந்த ஆவணத்திலும் அவரது பெயரை குறிப்பிடாமல் ரகசியமாக விசாரிக்க வேண்டும். அந்த அதிகாரியின் அந்தஸ்து மற்றும் புகாரில், அவரது பங்கு ஆகியவற்றை விசாரணையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.அடுத்தகட்டமாக, பூர்வாங்க விசாரணைக்கு முந்தைய நிலையில், புகார் கூறப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து தலைமை அதிகாரியின் விருப்பத்தின் அடிப்படையில் மிக ரகசிய விசாரணை நடத்தலாம்.
விரிவான விசாரணை
ஒரு குறிப்பிட்ட அதிகாரி மீது வந்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணையின் போது, அந்த வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்தாலும், விரிவான விசாரணை நடத்திய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.சொத்து குவிப்பு தொடர்பான புகார்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணையில், அந்த நபர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது உறுதியானாலும், விரிவான விசாரணை நடத்தி தான் உரிய ஆவணங்களை திரட்ட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் சிக்கும் நிலையில், அவற்றை வைத்து வழக்கு பதிவு செய்து, அந்த நபரின் வீட்டை சோதனையிட்டால் வழக்குக்குத் தேவையான பெருமளவு ஆவணங்களை கைபற்றலாம்.ஆனால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, பூர்வாங்க விசாரணையில் முக்கிய தடயங்கள் குறித்து தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து அவற்றை கைபற்றாமல், விரிவான விசாரணை நடத்தப்பட்டால் ஏற்படும் காலதாமதம் தடயங்களை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவும். இதனால், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், தடயங்களையும் கைபற்றுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும். இதனால், ஊழல் புகார்கள் நிரூபிக்க முடியாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நிறைய வாய்ப்புண்டு.ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை நடைமுறைகள் தொடர்பான வழிக்காட்டி கையேடு உள்ளது. இதன்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் புதிய அளவுகோலுக்கான தேவை என்ன என்பது புரியவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வியாழன், 7 ஜூன், 2012

சென்னை, மதுரை, கோவையில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுமா?

நகர்ப்புறப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, விவசாய நிலங்களை குடியிருப்பாக மாற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்த தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளது. இதனால், வீட்டு வசதி. நகர்ப்புற அமைப்புகளில் முன்னேற்றம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,), செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
நிபந்தனைகள்:மத்திய அரசின் நிதி உதவியுடனான இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், அதிக நிதி உதவி பெறவும், நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகம், நில நிர்வாகம், பத்திரப்பதிவு போன்ற துறைகளின் பணிகள் தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன.இந்த நிபந்தனைகளை, அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றுவதன் அடிப்படையிலேயே, புதிய திட்டங்களுக்கான அனுமதியும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிபந்தனைகளை நிறைவேற்ற தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நில பரிவர்த்தனையில் பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தீர்வை, இந்த நிதி ஆண்டு முதல், 1 சதவீதம் குறைக்கப் பட்டு உள்ளது.இதன் அடுத்தகட்டமாக, நகர்ப்புற
 பகுதிகளில், விவசாய நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. நாடு முழுவதும், 52 நகரங்களில் இந்த நிபந்தனையை நிறைவேற்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு ஒப்புதல்:இது தொடர்பாக, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., அண்மையில் வெளியிட்ட திட்டங்களின் நடவடிக்கை அறிக்கையில், ""சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட, 52 நகரங்களில் விவசாய நிலங்களை குடியிருப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என குறிப்பிடப் பட்டு உள்ளது.அதே சமயம் தற்போது,மத்திய அரசு சந்தித்து வரும் மொத்த வளர்ச்சிப் பின்னடைவில், முழுவீச்சில் இம்மாதிரித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமா என்பது இனித் தெரியும்.
பாதிப்பு என்ன?நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் நடவடிக்கைகளை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு குடியிருப்பு வசதி கிடைக்கும் என, எடுத்துக் கொண்டாலும், இது நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியை பாதிக்கும்.எனவே, விவசாய நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விலை குறையுமா?இதுகுறித்து, பல்வேறு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:விவசாய நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்றும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரி வருகிறோம். இதன் மூலம், புறநகர்ப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மனைகள் விற்பனைக்கு வரும். இதனால், வீட்டுமனைகளின் விலை உயர்வு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆனாலும் இன்றைய கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைவால், எந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும்என தெரியவில்லை. அதேபோல, அன்னிய நேரடி மூலதன முதலீடு குறைந்த நிலையில், இத்துறைக்கு தேவைப்படும் மூலதனம் எங்கிருந்து வரும் என்பதும், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சென்னையில் விவசாய நிலம் எவ்வளவு?
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின், இரண்டாவது மாஸ்டர் பிளான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 1973ம் ஆண்டு நிலவரப்படி, 73,689 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக இருந்தன. 1977ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, விவசாய நிலங்களை, பிற பயன்பாட்டுகளுக்கு மாற்றுவது தொடர்பாக, 725 திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியது. இதனால், இப்போதைய நிலையில், 7,295 ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. நிலபயன்பாடு வழிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டால், இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைக்கு மாறிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

திங்கள், 4 ஜூன், 2012

ஒரு மனைக்கு ரூ.6.40 லட்சம் வசூலிக்க திட்டம்: கீழ்கட்டளை நிலப்பிரச்னைக்கு புதிய தீர்வு

கீழ்கட்டளை பகுதியில் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களை, ஒரு மனைக்கு, 6.40 லட்ச ரூபாய் வீதம் வசூலித்து வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளையில் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, 1990ம் ஆண்டு, 56.57 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, நில உரிமையாளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றனர்.

இழப்பீடு நிர்ணயம்இருப்பினும், இந்நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து, வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக 53 லட்ச ரூபாயை பூந்தமல்லி கோர்ட்டில் அதிகாரிகள் செலுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், 1999ம் ஆண்டு, ஐகோர்ட்டின் வெவ்வேறு
நீதிபதிகள் தனித்தனியாக வழங்கிய தீர்ப்புகளில், வீட்டு வசதி வாரிய அறிவிப்பு
செல்லாது என அறிவித்தனர்.


இதன் பிறகும், கீழ்கட்டளை மக்களுக்கும், வீட்டு வசதி வாரியத்துக்கும் இடையிலான சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

வாரியம் நடவடிக்கைஇது தொடர்பாக வீட்டு வசதி வாரியம், 2006ல் தாக்கல் செய்த ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை அடுத்து, மற்ற வழக்குகளுக்கும் இதை உறுதி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக, 1993ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, 2011ம் ஆண்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

'தினமலர்' செய்தி எதிரொலி
வாரியத்தின் இந்நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தியை, ஆகஸ்ட் 3ம் தேதி, "தினமலர்' வெளியிட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தன்சிங் எம்.எல்.ஏ., ஆகியோர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.


புதிய முடிவுஇந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்:
கீழ்கட்டளையில் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட, 56.57 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், இனம் 3ல் வரும் நிலங்களுக்கு செலவு செய்யப்பட்ட தீர்வு தொகைக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட, 3.20 லட்சத்தை இரண்டு மடங்காக அதாவது மனை ஒன்றுக்கு, 6.40 லட்ச ரூபாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலித்து ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்ய, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான கோப்புகள், வீட்டு வசதி மற்றும் நகர் ஊரமைப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தி.நகர் கடைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகளை திறந்திருப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து, ஐகோர்ட் இன்று முடிவு செய்கிறது.
சென்னை தி. நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 25 வணிக வளாகங்களுக்கு சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வியாபாரிகள் தொடுத்த வழக்கில், சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரத்துக்கு திறக்க அனுமதித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் இறுதி முடிவை, சென்னை ஐகோர்ட் எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், சீல் வைக்கப்பட்ட கடைகள் திறந்திருப்பதற்கான கால அவகாசத்தை முதலில் எட்டு வாரங்களுக்கு நீட்டித்தது.
அரசு பதில் மனு
நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அமலாக்குவது குறித்து முடிவெடுக்க, மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரியதன் அடிப்படையில் இவ்வழக்கு, ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அது வரை, சீல் வைக்கப்பட்ட தி. நகர் கடைகள் திறந்திருப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்தும் வகையில், நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 113 சி என்ற புதிய பிரிவை சேர்க்க இருப்பதாகவும்,
சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடரின் போதுதான் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அதற்காக இன்னும் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்படுமா?
இதையடுத்து, இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் பதில் மனு அடிப்படையில், நீதிபதி மோகன் குழு பரிந்துரைகளை அமலாக்கும் வகையில், கூடுதல் கால அவகாசம் அளிப்பதா என்பது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதுவரை, தி.நகர் கடைகள் திறத்திருக்க அனுமதிப்பதா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.
சி.எம்.டி.ஏ., நிலை என்ன?
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த வழக்கில் அரசு, தனது தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.எம்.டி.ஏ., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இப்போது வரை விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ., தயாராகி வருகிறது.
இதனால், விதிமுறைகளை மீறி
கட்டப்பட்ட தி.நகர் கடைகள் நாளைமுதல் திறந்திருக்குமா என்பது, ஐகோர்ட்டின் இன்றைய முடிவை பொறுத்தே அமையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கோயம்பேடு உணவு தானிய அங்காடி திட்ட செலவுக்கு ரூ.128 கோடி

கோயம்பேடில் உணவு தானிய அங்காடி அமைக்க அரசு அனுமதித்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆறு ஆண்டு தாமதித்ததால், திட்ட மதிப்பு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்து உள்ளது. இதனால், திட்டத்தில் உருவாக்கப்பட உள்ள கடைகளின் விலையும் உயர வா#ப்பு உள்ளது.
ஜார்ஜ் டவுன் பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பூ, காய், கனி, உணவு தானியம், ஜவுளி மற்றும் இரும்பு பொருட்கள் மொத்த விற்பனை அங்காடிகளை, அப்போது நகருக்கு வெளியில் இருந்த கோயம்பேடு பகுதிக்கு மாற்ற, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அர” முடிவு எடுத்தது. முதல் கட்டமாக, கோயம்பேடில், பூ, காய், கனி அங்காடிகள், 1996ல் இடமாற்றப் பட்டன.
கொள்கை, செயலில் "வேகம்'
இதை அடுத்து, மற்ற அங்காடிகளை மாற்றுவதில் கொள்கை அளவிலேயே மெத்தனம் ஏற்பட்டது. கோயம்பேடில், உணவு தானியம், ஜவுளி மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை அமைக்கும் திட்டம், கடந்த 2005ம் ஆண்டில் தான் இறுதி செய்யப்பட்டது.
15.60 ஏக்கரில், 61.85 கோடி ரூபா# மதிப்பில், 500 கடைகள் கொண்ட உணவு தானிய அங்காடிவளாகத்தை, சி.எம்.டி.ஏ., மூலம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டது. அடுத்து, கடைகளை ஒதுக்க குலுக்கல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலையில், பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
கடந்த ஆண்டு, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த திட்டங்கள் மீண்டும் வேகமெடுத்தன. கோயம்பேடில் உணவு தானிய அங்காடி வளாகம் அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப் படும் என, அண்மையில் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதையடுத்து, இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கினர்.

செலவு விர்ர்ர்...
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
திட்டத்துக்காக ஏற்கெனவே கையகப் படுத்தப் பட்ட நிலத்தின் ஒரு பகுதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப் பட்டு விட்டதால், வேறு நிலம் கையகப் படுத்தப் பட்டு, பணிகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பான, 61.85 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதனால், 128.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பு மாற்றம்
இடமாற்றம், திட்ட மதிப்பு மாற்றம் காரணமாக அரசிடம் இருந்து புதிதாக நிர்வாக ஒப்புதல் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பு காரணமாக, திட்டத்தை இரண்டு கட்டங்களாக நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.

ஞாயிறு, 20 மே, 2012

சிங்கப்பூர், ஹாங்காங் மாதிரியில் சென்னையில் போக்குவரத்து திட்டங்கள்: சி.யு.எம்.டி.ஏ., முடிவு

சிங்கப்பூர், ஹாங்காங் நரகங்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகளை, சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக போக்குவரத்து அதிகாரிகளை, இந்நகரங்களுக்கு அனுப்ப, சி.யு.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.  
வரைவு விதிமுறை:
சென்னையில், போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், ஒரே பயணச் சீட்டில், அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (சி.யு.எம்.டி.ஏ.,) ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், இனி வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள போக்குவரத்து தொடர்பான திட்டங்களை, நெறிப்படுத்தும் அதிகாரம் சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், போக்குவரத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் எத்தகைய வசதிகள் இடம்பெற வேண்டும்; எத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இப்புதிய வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 
லண்டன் மாதிரி:
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவன்றின் அடிப்படையில், சென்னைக்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
வெளிநாடு பயணம்:
இது தொடர்பாக, சி.யு.எம்.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னையில், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் குழுவை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் மூலம், இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்ட பின், இக்குழுவின் வெளிநாட்டு பயணம் இறுதி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள், இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முடிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சனி, 19 மே, 2012

ஆவணங்களை இருட்டடிப்பு செய்ய சி.எம்.டி.ஏ., முயற்சி!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அடிப்படை தகவல்கள் அடங்கிய கையேட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை, பொது மக்கள் பயன்படுத்த முடியாதபடி, சி.எம்.டி.ஏ., தடை செய்துள்ளது. இதனால், வெளிப்படையான நிர்வாகம் என்பது, இத்துறையில் கேள்விக்குறியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஒவ்வொரு அரசுத் துறையிலும், அத்துறையின் அடிப்படை பணிகள், அதற்கான நிர்வாக நடைமுறைகள், பொது மக்கள் அணுக வேண்டிய அதிகாரிகள் குறித்த விவரங்கள், பொது தகவல் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4(1)ஏ பிரிவின்படி, இத்தகைய விவர கையேட்டை வெளியிடுவது, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த கையேட்டின் அனைத்து பிரிவுகளும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.
 சி.எம்.டி.ஏ.,வில்... :
 இத்தகைய கையேடுகளை, ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகதத்தில் உள்ள பெரும்பாலான அரசுத் துறைகள், இத்தகைய கையேடுகளை முறையாக வெளியிடுவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்ட கையேட்டை, அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒன்று முதல், 18 பிரிவுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய ஆவணம், பொது மக்களின்பயன்பாட்டுக்கான ஆவணமாகும்.
ஆனால், இதில், 10, 11 ஆகிய பிரிவுகளை மட்டும், பொது மக்கள் பார்க்க முடியாத வகையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தடை செய்து வைத்துள்ளது.
ஆர்வலர்கள் அதிர்ச்சி :
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மாநில தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் இச்செயல்பாடு, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படை தன்மையை முடக்கும் வகையில், இச்செயல் அமைந்துள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது, தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எதில் ஆர்வம்? :
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தற்போது, கலெக்டர் அலுவலக சம்பந்தப்பட்ட புகார்களை அறிய, மக்கள் அதிகளவில்ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற இலாகாக்கள், அதன் நடைமுறைகள், அதை நிர்வகிக்கும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு அதிக அனுபவம் இல்லாததால், அதில் ஆர்வம் காட்டுவதில்லை.ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைப்பில் உள்ள அதிகார மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப்பற்றிய விவரங்கள், அவர்கள் பணிப்பொறுப்புகள், அவர்கள் செயல்படும் நிர்வாகத் தலைமை குறித்த விவரங்களை மறைக்கும் விதத்தில் செயல்படுவது, எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே, இப்போதைய கேள்வி.

புதன், 8 பிப்ரவரி, 2012

விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதில் சி.எம்.டி.ஏ., மெத்தனம்!

விதிமீறல் கட்டடங்களுக்கு, தினசரி அடிப்படையில் அபராதம் விதிக்க, இரண்டாவது மாஸ்டர் பிளானில் வழிவகை செய்யப்பட்டுள்ளபோதிலும், கடந்த மூன்றாண்டுகளாக, இதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், இதுவரை 2007ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் வரையிலான, கட்டடங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டடங்களை, நீதிபதி மோகன் குழு பரிந்துரைகள் அடிப்படையில் வரன்முறை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.இதன் பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு எந்த தடையும் இல்லை. அப்படியிருந்தும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 2007ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவில்லை. 2007 ஜூலைக்கு பின்...:2007ம் ஆண்டு ஜூலைக்கு பின் சென்னை மற்றும் புறநகரில் சி.எம்.டி.ஏ.,வும் உள்ளாட்சி அமைப்புகளும் நடத்திய ஆய்வில், சுமார் 10,881 கட்டடங்கள் ,விதி மீறி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் 7,127 கட்டடப் பணியை நிறுத்த அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அளிக்கப்பட்டதில் 4,507 கட்டடங்களுக்கு இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு, விதிமீறல் கட்டடம் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இக்கட்டடங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் கூடவிதிக்கப்படவில்லை.அபராதம்
விதிக்க வழி உண்டு?கட்டட விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இரண்டாவது மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியான வளர்ச்சி, விதிமுறைகளில் சாதாரண குடியிருப்பு முதல், அடுக்குமாடி வணிக வளாகம் வரை, அனைத்து கட்டடங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் 38வது விதியில், கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:விதிகள்ஒன்று முதல் 37வரையுள்ள ஒழுங்குமுறைகள் எதனையும், எவர் மீறினாலும் ,அவர் முதலில் 1,000 ரூபாய் அபராதமாக செலுத்தும்படி தண்டிக்கப்படுவார். இந்த அபராதம் விதிக்கத்தக்க விதிமீறல் தொடரும் நிலையில், முதல் அபராதம் விதிக்கப்பட்ட நாளில் இருந்து, ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபாய் வீதம், அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.இவ்வாறு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் மெத்தனம்:கடந்த 2008ம் ஆண்டு இரண்டாவது மாஸ்டர் பிளானுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. இருப்பினும், இப்போது வரை, எந்த கட்டடத்துக்கும் இந்த விதிகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படவில்லை. விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை தடுக்காதது, கோர்ட் தீர்ப்பை அமலாக்காதது போன்று, மாஸ்டர் பிளானில் வழங்கப்பட்டுள்ள அபராதம் விதிப்பதை செயல்படுத்துவதிலும், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.இது குறித்து சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது,
 "நிர்வாக ரீதியாக மேலதிகாரிகளிடமிருந்து இதற்கான எந்த அறிவுறுத்தல்களும் வராததால் அபராதம்விதிக்கவில்லை'என்றனர்.இன்னும் 14 நாள்கள்...:சென்னை தி. நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வாரங்களுக்கு திறக்க கடந்தமாதம் ஒன்பதாம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் அடுத்த ஆறு வாரங்களுக்குள் ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டது.இதன்படி தி. நகர் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த மாதம் 10ம் தேதி சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.இதில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த கால அவகாசத்தில் இன்னும் 14 நாள்களே ö இருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தி. நகர் கடைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (பிப். 7) விசாரணைக்கு வருகிறது.










வியாழன், 26 ஜனவரி, 2012

விதிமீறல் கட்டடங்கள்: தமிழக அரசின் மவுனம் கலையுமா?

விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில், ஐகோர்ட் உத்தரவு காரணமாக, தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு வெளிப்படுத்தும் நிலைப்பாடு தான், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமையும். சென்னை தி.நகரில், விதிமீறல் புகார் காரணமாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 25 வணிக வளாகங்களுக்கு வைக்கப்பட்ட சீல், கடந்த 10ம் தேதி, தற்காலிகமாக அகற்றப்பட்டது. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு, சென்னை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தமிழக அரசும், சி.எம்.டி.ஏ.,வும், வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் நிலை என்ன? விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், கடந்த ஓராண்டு காலமாக, தன் நிலைப்பாடு குறித்து தமிழக அரசு சார்பில், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யபடவில்லை என்பது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில், 2006ல், ஐகோர்ட் தீர்ப்பளித்தபோது, ஆட்சிப் பொறுப்பில் தி.மு.க., இருந்தது. இதனால், விதிமீறல் கட்டடங்களுக்கு ஆதரவான நிலையை, தமிழக அரசு எடுத்தது. இதற்காக, முதலில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின், 2007ல், அவசர சட்டம் கொண்டு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, இந்த சட்டத்தை நீட்டிப்பும் செய்தது. இவ்வாறு, கடந்த ஐந்தாண்டு காலமாக, விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. இதன்பின், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள், கண்காணிப்புக்குழு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இதில் தங்களது நிலைப்பாடு குறித்து, கோர்ட்டில் எவ்வித பதில் மனுவையும், தமிழக அரசு தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் அண்மையில் பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில், தன் மவுனத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கும்? இப்போதைய சூழலில், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவுக்கான குறிப்புகளை இறுதி செய்வதற்கான பணிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஐகோர்ட் மற்றும் கண்காணிப்புக்குழு உத்தரவுகளை நிறைவேற்ற, அரசின் சார்பு நிறுவனங்களான, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே, அரசின் பதில் மனு இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அதில் தெரிய வந்த விவரங்கள், பதில் மனுவில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
சி.எம்.டி.ஏ., என்ன செய்யும்? கோர்ட் உத்தரவுப்படி, சி.எம்.டி.ஏ., சார்பில், வரும் 30ம் தேதி, தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை இறுதி செய்யும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தி.நகரில், கண்காணிப்புக்குழு உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில், குறிப்பிடப்பட்ட, 64 வணிக வளாகங்களில் உள்ள விதிமீறல்கள் குறித்த விவர அறிக்கை, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அதன்பின் சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்கள், இந்த பதில் மனுவில் சேர்க்கப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவுக்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.
"அதிகாரிகள் தான் பொறுப்பு': தி.நகரில், விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வறிக்கையில், கட்டடங்களின் எண், நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு போன்ற தகவல்களில் பிழைகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் கூறுகையில், ""இதன் காரணமாக, சில கட்டடங்கள், மாற்றி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு, ஏற்கனவே ஆறு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், அந்த கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளே, இத்தவறுகளுக்கு காரணம்'' என்றார்.

புதன், 25 ஜனவரி, 2012

நடத்தை விதிமீறல்: ஸ்ரீபதி மீதான புகார் குறித்து ஆய்வு துவக்கம்: நெற்குன்றம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றதால் சிக்கல்

நடத்தை விதிகளுக்கு மாறாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த முதல்கட்ட ஆய்வை, தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

வீடு ஒதுக்கீடு:அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட நெற்குன்றம் வீட்டுவசதி திட்டத்தில், ஐ.ஏ.எஸ்., போன்ற பதவியில் உள்ளவர்களுக்கு வீடு ஒதுக்க, 2011 ஏப்ரல் மாதம் குலுக்கல் நடந்தது.இதுகுறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள பதிலில், "ஸ்ரீபதிக்கு, "எச்' பிளாக்கில் 16 (ஏ) அடுக்கில், முதலாவது வீடு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்காக, டோக்கன் எண் மூன்று ஒதுக்கப் பட்டுள்ளது,' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

கவர்னரிடம் புகார்:இதுதொடர்பாக, செல்வராஜ், சங்கர் ஆகியோர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு, கடந்த வாரம், தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பினர்:
தலைமைச் செயலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதி, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தன் தகுதி குறித்த தவறான தகவல்களை அளித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பிரிவில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
இது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின், 17வது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள, மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்து ஸ்ரீபதியை நீக்கம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பதவியில் நீடிக்க எதிர்ப்பு:இதுகுறித்து, பொள்ளாச்சியை சேர்ந்த, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், பாஸ்கரன் மற்றும் மதுரையை சேர்ந்த ஆர்வலர், சம்பத் ஆகியோர் கூறியதாவது:அரசு அலுவலகங்களில் தகவல் கிடைக்காத பொதுமக்கள், அரசு நிர்வாகத்துக்கு எதிராக அளிக்கும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நிலையில் உள்ள அதிகாரியான ஸ்ரீபதி, அரசிடம் இருந்து வீடு ஒதுக்கீடு பெறுவது, முற்றிலும் நியாயமற்றது. தகவல் பெறும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

"இது பழய செய்தி':இதுகுறித்து, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியிடம் கருத்து கேட்டபோது, "நெற்குன்றம் வீட்டுவசதி வாரிய திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றது பழைய செய்தி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 17வது பிரிவுக்கு எப்படி எதிரானதாகும்? இப்படிப்பட்ட புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு என்ன செய்வது?' என்றார்.ஆய்வு துவக்கம்:ஸ்ரீபதி மீதான புகார்கள் குறித்து, கவர்னர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:இந்த புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கான முதல்கட்ட ஆய்வு துவங்கப் பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற புகார்கள் வரும்போது, அதன் உண்மை தன்மை, முதலில் ஆய்வு செய்யப்படும். அதன்பின், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையிலேயே, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடத்தை விதி என்ன?தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இயல் நான்கு, பிரிவு 17ல், மாநில தலைமை தகவல் ஆணையருக்கான நடத்தை விதிகள் விரிவாக நீக்கம் செய்ய, பல்வேறு காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதன் உட்பிரிவு நான்கில் குறிப்பிட்டுள்ள விதிமுறை விவரம்:* மாநில தகவல் ஆணையர், இந்திய அரசில் அல்லது அதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், உடன்படிக்கையில், எந்த வழியிலேனும் தொடர்புள்ளவராக அல்லது கூட்டுருவாக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் உறுப்பினராகவும், உறுப்பினர் அல்லாமலும், அதிலிருந்து எழும் பயன், ஆதாயம் எதிலும் பங்கு பெற்றவராக இருப்பின், இச்சட்டத்தின் உட்பிரிவு ஒன்றின்படி, தவறான நடத்தைக் குற்றம் புரிந்தவராக அவர் கருதப்படுவார்.
* தவறான நடத்தை உறுதி செய்யப்படும் நிலையில், தலைமை தகவல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, கவர்னர், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்டு, நடவடிக்கை எடுக்கலாம்.
* சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை பெறுவதற்கான இடைப்பட்ட காலத்தில், தலைமை தகவல் ஆணையரை, தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்; ஆணையத்திற்கு அவர் வருவதை, தடை செய்யலாம்.
* இதே பிரிவில், உட்பிரிவு மூன்று (உ)ன் படி, மாநிலத் தலைமை தகவல் ஆணையர், தன் பணிகளில் குந்தகம் விளைவிக்கும் வகையில், நிதி அல்லது பிற நலனை அடைந்திருப்பின், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

திங்கள், 23 ஜனவரி, 2012

தி. நகரில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு உரிமையாளர்களே முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.
எதிரொலி: இந்நிலையில், உஸ்மான் சாலையில், பனகல் பூங்கா எதிரில், சரவணா செல்வ ரத்தினம் நிறுவனத்தில் இரு பெரிய வளாகங்கள் உள்ளன. இவற்றை அடுத்துள்ள நிலத்தில், இதே நிறுவனம் சார்பில் மேலும் ஒரு வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக திட்ட அனுமதி கோரும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்ட வரைபடத்தில், வளர்ச்சி விதிகளின்படி, போதிய அளவுக்கு வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் ஆகியவற்றுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதே சமயத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியை கடந்தாண்டு துவக்கியது. திட்ட அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால், இதை யாரும் தடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று தளங்களை தாண்டி கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் திட்ட வரைபடம் விதிகளுடன் பொருந்திப் போகாததால், அதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிராகரித்தனர். இதன்பின், தன் நிலத்தில் அந்த நிறுவனம் கட்டுமானப் பணியை தொடர்ந்து நடத்தியதால், பணியை நிறுத்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
இடிப்பு துவக்கம்: இந்நிலையில், ஏற்கனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில், 25 வணிக வளாகங்கள் சி.எம்.டி.ஏ., அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து 71 நாள்கள் செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிறுவனத்தினர் விதிகளுக்குட்பட்டு புதிய திட்ட  வரைபடத்தை தயாரித்து சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக, அங்கு ஏற்கனவே மூன்று தளங்கள் வரை கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கட்டட இடிப்பு பணியை வணிக வளாக உரிமையாளர்களே துவக்கியுள்ளனர். இது குறித்து இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியபோது,""பெரிய ஜே.சி.பி., இயந்திரத்தின்துணையுடன் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பகலில் இடிக்கும் பணிகளும், அதனால் ஏற்படும் கட்டட கழிவுகளை வெளியேற்றும் பணிகள் இரவு நேரத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. முழுவதும் இடித்து முடிக்க 20 முதல் 30 நாள்கள் வரை ஆகலாம்,'' என்றனர்.
மற்ற நிறுவனங்களும்...: இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறும்போது, ""பிரபல வணிக நிறுவனம் ஒன்று மூன்று தளங்கள் வரை கட்டிய கட்டடத்தை தானே இடிப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்கள் கட்டடங்களை தாங்களே இடித்து விதிகளுக்குட்பட்ட வகையில் புதிதாக கட்டிக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றனர்.