வணிக வளாகங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை 1985-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை காரணமாக பல்லாவரம் நகராட்சிக்கு ரூ. 1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளை பஸ் நிலைய வளாகத்தில் மெகாசிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் ரூ. 68 லட்சத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தரைதளத்தில் தலா 144 சதுர அடி பரப்பளவில் 44 கடைகள் உள்ளன.
2770 சதுர அடி, 2800 சதுர அடி, 815 சதுர அடி என முன்று பிரிவுகளைக் கொண்டதாக முதல் தளம் கட்டப்பட்டது.
ஒரு சதுர அடிக்கு ரூ. 10 என்ற அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 92-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தரை தளத்தில் உள்ள 43 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு கடையில் நகராட்சியின் வரி வசூலிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் உள்ள வணிக பகுதிகள் கடந்த 9 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறை 29-04-1985-ல் பிறப்பித்த அரசாணை 285-ன் படி நகராட்சி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையே காரணமாக கூறப்படுகிறது.
கீழ்க்கட்டளை பகுதியில் தனியார் கட்டடங்களில் செயல்படும் வங்கிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அளிக்கும் வாடகையைவிட நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்படும் வாடகை 200 மடங்கு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
உதாரணமாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இந்த வளாகத்தில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசாணை எண் 285-ஐ சுட்டிக்காட்டி நகராட்சி அதிகாரிகள் 970 சதுர அடி இடம் தருவதாகவும் அதற்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகை தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை காவல் துறை ஏற்காததால் 637 சதுர அடி இடத்தை ரூ. 16,500 வாடகையில் அளிக்க நகராட்சி அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இதே அளவு இடத்தை ரூ. 6,000 மாத வாடகைக்குப் பெற்று காவல் நிலையம் தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
அஞ்சலகம்...:
இந்நிலையில், கீழ்க்கட்டளை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் இங்கு அஞ்சலகம் தொடங்க தபால்துறை முடிவு செய்தது. இதற்காக 750 சதுர அடி இடம் கேட்டு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு 26-9-2008-ல் பதில் அளித்த நகராட்சி ஆணையர், கீழ்க்கட்டளை வணிக வளாகத்தில் 2770 சதுர அடி, 2880 சதுர அடி அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை எண் 285-ன் படி வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்தால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
ஆனால், கீழ்க்கட்டளை அஞ்சலகத்துக்கு 815 சதுர அடி நிலத்தை ரூ. 25 ஆயிரம் மாத வாடகை தர வேண்டும் என நகராட்சி சார்பில் கோரப்பட்டது. மேலும், 9 மாத வாடகையை முன்பணமாகத் தர வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது கீழ்க்கட்டளை பகுதியில் சந்தை நிலவரத்தைவிட அதிகமாக உள்ளதாகக் கூறி இதனை ஏற்க தபால்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்த வளாகத்துக்கு வாடகை நிர்ணயிப்பதில் அரசாணை 285-ஐ சுட்டிக் காட்டும் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் முதல் மாடியில் 2 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 20 ஆயிரம் மாத வாடகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஒரு விதத்திலும், அஞ்சலகத்துக்கு ஒரு விதத்திலும் வாடகை நிர்ணயிப்பது ஏன்? என்று கீழ்க்கட்டளை பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதி:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது இப்பகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் நகராட்சி வணிக வளாகத்தில் இடம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் இ. கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
ஆனால், வாடகை நிர்ணயிப்பதில் நகராட்சி அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் போக்கு நகர்மன்றத் தலைவரின் உறுதி நிறைவேறுவதை தடுப்பதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
வருவாய் இழப்பு:
மேலும், சந்தை மதிப்புப் படி சதுர அடி ரூ. 10 வீதத்தில் வாடகைக்கு விட்டிருந்தால் மாதம் ரூ. 75 ஆயிரம் வீதம் கடந்த 9 ஆண்டுகளில் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இந்த வருவாய் நகராட்சிக்கு இழப்பாக மாறியுள்ளது. வணிக வளாகமும் பாழாகும் நிலையில் உள்ளது.
அதிகாரிகளின் இந்தப் போக்கு காரணமாக கீழ்க்கட்டளை பகுதி மக்களுக்கு அஞ்சலக வசதி கிடைப்பதும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மட்டுமல்ல...:
1985-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை காரணமாக பல்லாவரம் போன்று பல்வேறு நகராட்சிகளுக்கு சொந்தமான வளாகங்களை வாடகைக்கு விடுவதில் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பல்வேறு நகராட்சிகளுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக