திங்கள், 27 ஜூலை, 2009

"பாண்டு' வாத்தியக் காவலர்கள் நியமனம்: தேர்வுக் குழுமத்தின் "மெüனம்' கலையுமா?

தமிழக காவல் துறையில் "பாண்டு' வாத்தியக் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 317 பேர் நியமன ஆணை கிடைக்காமல் கடந்த ஓராண்டாக காத்திருக்கின்றனர்.

தமிழக காவல் துறையில் தலைமையகம் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் ஆணையர், ஐ.ஜி. அலுவலகங்கள், சிறப்பு காவல்படை பட்டாலியன்களில் வாத்தியக் காவலர்கள் பிரிவு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாத்தியக் காவலர்களாக இந்தப் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மற்ற காவலர்களைப் போலவே தேர்வு நடத்தி இந்தப் பிரிவுக்கான காவலர்களைத் தேர்வு செய்கிறது. ஆனால், பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதல், லத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணி சார்ந்த சில பயிற்சிகள் தவிர்த்து மற்ற காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் இவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன.


ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வாத்திய காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பான தமிழக அரசின் உள்துறை பிறப்பித்த அரசாணையின்படி (எண்: 877- காவல் 9) கடந்த 2007-ல் வாத்திய காவலர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.


2008 ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.


இதில் பங்கேற்றவர்களின் கல்வித் தகுதி, வயதுச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இசைக்கும் திறன் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இவற்றில் தேர்வானவர்கள் காவல் விசாரணை, கைவிரல் ரேகை எடுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனையும் செய்து இறுதியாக 317 பேர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 2008 ஜூன் 24-ல் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு உரிய நியமன ஆணை வழங்கி பயிற்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.


ஆனால், தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாக பயிற்சிக்கு அனுப்பப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் 317 பேரும் காத்திருக்கின்றனர்.
"இது தொடர்பாக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை பல முறை அணுகினாலும், அதிகாரிகள் தரப்பில் உறுதியான பதில் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்கின்றனர் வாத்திய காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.


ஆனால், எங்களுக்கு பிறகு மேலும் ஒரு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடித்தவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியை முடிக்கும் நிலையில் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.


வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் அல்லது உயர் படிப்புக்கும் செல்லாமல் வாத்தியக் காவலர் வேலைக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நியமன ஆணைகள் வழங்குவதை தேர்வுக் குழுமம் விரைவுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுக் குழுமத்தின் நிலை...:

இது தொடர்பாக விசாரித்த போது, வாத்திய காவலர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆணைகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.


இவர்களை தவிர்த்துவிட்டு வேறு பிரிவினரை பயிற்சிக்கு அனுப்பியதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மறுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக