சென்னை, ஜூலை 9: சென்னை விமான நிலையத்தில் இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் தொடர்பாக 2007 மே 22-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இதற்கு 1069.99 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
விமான நிலையத்தை சுற்றியுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக கோவூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்தது.
அரசாணை வெளியீடு:
இது தொடர்பாக கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் அரசாணையை (எண்: 108) போக்குவரத்துத் துறை 2007 செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக மணப்பாக்கத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள 126 ஏக்கர் நிலம் கடந்த ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் விமான நிலையத்தில் கிழக்கு - மேற்காக உள்ள 2-வது ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் சில மாதங்கள் முன்னர் தொடங்கப்பட்டன.
பெரும்பாலான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மக்கள் எதிர்ப்பு:
இந்நிலையில், புதிய ஓடுதளம் அமைக்க தங்கள் நிலங்களை கையகப்படுத்த மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கோவூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் (ஐ.ஏ.ஏ.ஐ.) இப் பகுதி மக்கள் பல்வேறு மனுக்களை அனுப்பி முறையிட்டனர்.
ஆர்வம் இல்லை: மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு வழங்கும் நிலத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியகூறுகள் குறித்த எவ்வித ஆய்வுப் பணிகளும் தொடங்கப்படவில்லை என ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு விரிவாக்கப் பணிகளுக்கு அதிக நிதியை முதலீடு செய்வதைவிட ஸ்ரீபெரும்பூதூரில் தனியார் முதலீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கருதுவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் நிலை:
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் 2009-2010 நிதி ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 126 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் குறித்தும், ஸ்ரீபெரும்பூதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஓடுதளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இணை ஓடுதளம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஐ.ஏ.ஏ.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை (எண்: 108) ரத்து செய்ய வேண்டும் என மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக