புதன், 15 ஜூலை, 2009

ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?

சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று அபகரிக்க முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த நிலத்தை மீட்கக் குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவோடு இப்போது நில அபகரிப்பு நடைபெற்றுள்ளது என்பதுதான் இந்த குற்றச்சாட்டில் வேடிக்கை.

கோயம்பேடு திருமங்கலம் பகுதியில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான (சர்வே எண்கள்: 227/2, 227/3, 230/2) 3.03 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.

2003-ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான நிலங்களுடன், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்து புதிய மனைப்பிரிவு உருவாக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள "ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் முயற்சித்தனராம்.

இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் 29-1-2003-ல் நடைபெற்ற மாநகராட்சிமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திமுக எதிர்ப்பு:

கோயில் நிலத்தைத் தனியார் நிறுவனத்தினர் கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதாகக் கூறி அப்போது கவுன்சிலராக இருந்த ராயபுரம் மனோ தலைமையில் சைதை ரவி உள்ளிட்ட காங்கிரஸôரும், சி.வி. மலையன் தலைமையில் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய காங்கிரஸôர் தங்கள் கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்தனர்.

வருவாய் அதிகாரி ஆட்சேபம்:

கோயில் நிலத்தைக் கைப்பற்ற முயற்சி நடப்பது குறித்து சந்தேகப்பட்ட அப்போதைய மாநகராட்சி வருவாய் அதிகாரி ஜெயகாந்தன், கட்டட அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையினரும் கட்டட அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

""திருமங்கலீஸ்வரர் கோயிலை இடித்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தவறான ஆவணங்கள் மற்றும் தக்க அனுமதியற்ற வகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மூலம் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனம் அபகரிக்க முயற்சிக்கிறது; எனவே, இதற்கு எவ்விதக் கட்டட அனுமதியும் அளிக்க வேண்டாம்'' என அன்றைய மாநகராட்சி ஆணையர் எம். கலைவாணன் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த கெüரிசங்கர் கடிதம் எழுதினார்.

இதன் பின்னர் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், மாநகராட்சி எதிர்க்கட்சியினரின் போராட்டங்களையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலையிட்டதால் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனுவை மாநகராட்சி நிராகரித்தது.

சில ஆண்டுகள் கழித்து "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தினர் தங்கள் நிலத்துடன் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தையும் சேர்த்து புதிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்க "ஓசோன் குழுமத்துக்கு' விற்பனை செய்தனர்.

இந்த விற்பனையில் "ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ்' நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கும், இந்த நிலங்களின் பட்டா தொடர்பான உண்மைத் தன்மை குறித்த வழக்கும் இன்னும் தீர்க்கப்படாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது ஒருபுறம் இருந்தபோதும், நிலத்தை வாங்கிய "ஓசோன் குழுமம்', அங்கு மிகப்பெரிய அளவில் குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

இந்த நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்க முதலில் மறுத்தனர். தங்கள் நிலத்தின் பட்டா தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றைக் காட்டி ஓசோன் குழுமம் திட்ட அனுமதி கோரி சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.

ஓசோன் குழுமம் குடியிருப்பு மேற்கொள்ள உள்ள 42 ஏக்கரில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் அடங்கியுள்ளதாகக் கூறி, இதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சி.எம்.டி.ஏ.வுக்கு மீண்டும் கடிதம் அனுப்பினர்.

இருப்பினும், கோயில் நிலம் என கூறப்படும் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலம் நீங்கலாக மற்ற நிலங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு திட்ட அனுமதி கோரி ஓசோன் குழுமம் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பித்தது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்த கருத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களுக்குச் சாதகமாக காட்டியதையடுத்து, நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஓசோன் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்குவதற்கான தீர்மானத்துக்கு அண்மையில் நடைபெற்ற மாநகராட்சியின் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏன் இந்த முரண்பாடு? உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நிர்பந்திக்காத நிலையில், மறுப்பதற்கான அதிகாரம் தங்களிடம் இருந்தும் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் ஓசோன் குழுமத்தின் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இந்தத் திட்டத்தை ஏன் மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் நிறுத்தி வைக்கவில்லை என்பது தான் பலருடைய கேள்வி.

அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்னையில் 2003-ல் கோயில் நிலம் தனியாரால் அபகரிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து எதிர்த்த மா. சுப்பிரமணியன் இப்போது மேயராக இருக்கும் நிலையில், திடீர் மனமாற்றம் ஏன் வந்தது என கேள்வி எழுப்புகின்றனர் அறநிலையத்துறையினர்.

காங்கிரஸ், திமுக ஆதரவு...: 2003-ல் திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதுதான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களில் கட்டுமான திட்டத்துக்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி கோயில் நிலத்தை மீட்கும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை வேரறுக்கும் செயல் என்பதை திமுக சார்பில் மேயராக உள்ள மா. சுப்பிரமணியனும், காங்கிரஸ் சார்பில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சைதை ரவியும் உணராதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ள இந்த மன (?) மாற்றத்தால் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் தனியார் சிலரால் அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் மாற்றத்தின் பின்னணி குறித்தும் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக