சனி, 18 ஜூலை, 2009

திருமங்கலீஸ்வரர் கோயில் நில விவகாரம் வருவாய்த் துறை, சி.எம்.டி.ஏ. நிலை என்ன?

சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு விவகாரத்தில் வருவாய்த்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) நிலைப்பாடு குறித்து குழப்பம் நிலவுகிறது.


திருமங்கலீஸ்வரர் கோயில் நிலம் அபகரிக்கப்படுவது தொடர்பாக "தினமணி'யில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.


இதையடுத்து அந்த நிலத்தில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

மேலும், தன்னிச்சையாக செயல்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அந்த குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.


கோயம்பேடு சந்திப்பில் டபிள்யு.எஸ். இன்சுலேட்டர் சேதுராமன் என்பவரிடம் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். இதன் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் காலத்தில் அங்கு உள்ள மற்ற நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் மட்டுமல்லாது இதே பகுதியில் நீராதார புறம்போக்கு மற்றும் கிராம நத்தம் புறம்போக்காக சுமார் 9 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


2003-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தின் மனைப்பிரிவு திட்டம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த மாநகராட்சியின் அப்போதைய வருவாய் அதிகாரி ஜெயகாந்தன் தனது கடிதத்தில் மேற்கண்ட தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.


கோயில் நிலம் மட்டுமல்லாது வருவாய்த்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலமும் தவறான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இத்தகைய கிராம நத்தம் அல்லது நீராதார புறம்போக்கு நிலத்தில் எவ்வித அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என சி.எம்.டி.ஏ.வின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. எப்படி ஒப்புதல் அளித்தது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


மேலும், ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்தபோது நிலத்தின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமான முறையில் திருத்தப்பட்டுள்ளது குறித்த ஆட்சேபனைகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.


வரைபட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களுடன் நோட்டரி பப்ளிக் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள ஒருவரின் சான்றொப்பத்துடன் ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும் என சி.எம்.டி.ஏ. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வரும் ஆவணங்களின் உண்மைத் தன்மை தனியாக ஆய்வு செய்யப்படுவதில்லை.


இந்த நிலையில், ஓசோன் குழுமத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனம் விற்ற நிலத்தின் ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை மர்மமாகவே இருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக