சென்னை கோயம்பேடு சந்திப்பில் "ஓசோன் குழுமத்தின்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்தி வைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அனுமதியை அளித்த செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, "ரூ. 120 கோடி கோயில் நிலம் அபகரிப்பு?' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை "தினமணியில்' செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட விளக்க அறிக்கை:
ஓசோன் நிறுவனம் வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த 42.53 ஏக்கர் நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கருதப்படும் 1.77 ஏக்கர் நிலத்தின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைகால உத்தரவில் "தற்போது உள்ள நிலை தொடர' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்படி நிலத்தைத் தவிர்த்து மீதமுள்ள நிலத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு செய்து வரைபட அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல செயற்பொறியாளரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டது.
வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளபடி சாலை வசதிக்காக எடுக்கப்பட்ட நிலத்தினை மாநகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான தீர்மானம் எதுவும் மண்டல வார்டுக்குழு கூட்டத்திலோ அல்லது மாநகராட்சி மன்றத்திலோ ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படவில்லை.
எனவே, சாலை வசதிக்கான நிலத்தினை ஒப்படைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெறும் வரை 5-வது மண்டல செயற்பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டட அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் பெறாமல் முடிவு மேற்கொண்டதற்காக 5-வது மண்டல செயற்பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சைதை ரவி மறுப்பு:
""கட்டட அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் எதுவும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதத்துக்கு வரவில்லை. விவாதத்துக்கே வராத தீர்மானம் குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' என இது தொடர்பான தனது மறுப்பு அறிக்கையில் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை பி. ரவி (காங்கிரஸ்) பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இதே பிரச்னைக்காக ஆளுநரிடம் மனு கொடுத்தவர் மாமன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சேபிக்காதது ஏன்?
மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வரவில்லை என்பதற்காக மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சர்ச்சைக்குரிய நிலத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டம் மேற்கொள்ள கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து தனது ஆட்சேபத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சைதை ரவி தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த கட்டட அனுமதி வழங்கப்பட்டது குறித்து, 5-வது மண்டல தலைவரான, காங்கிரûஸச் சேர்ந்த சுரேஷுக்கு தெரிந்த விவரம் அதே காங்கிரûஸச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனது எப்படி? எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பை சைதை ரவி தட்டிக்கழிப்பதாக இது ஆகாதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
"ஓசோன் குழுமத்தின்' கட்டுமானத் திட்டம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும் நிலத்தை விற்ற ஸ்ரீ கிருஷ்ணா டைல்ஸ் மற்றும் பாட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்து நாளிதழ்களில் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கடந்த 2-ம் தேதி கூட இந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞரின் அறிவிப்பு தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.
பலிகடா?
ஏற்கெனவே மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு ஆளுநர், முதல்வர் தலையீடு வரை சென்ற விவகாரத்தில் மேயர், ஆணையர் உள்ளிட்டோருக்குத் தெரியாமல் மண்டல செயற்பொறியாளர் ஒருவர் தன்னிச்சையாக கட்டட அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் பலன் அடைந்த முக்கிய நபர் ஒருவரைக் காப்பாற்றவே செயற்பொறியாளர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்து வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துவிட்டதை காட்டி, ஓசையின்றி மாநகராட்சியால் கட்டட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த உரிய விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் மாநகர மேயர் ஈடுபட்டிருப்பதும், மேயர் மற்றும் ஆணையர் தலையீடு மட்டுமின்றி அதிகார மையத்தின் நெருக்கடியும் இந்த அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக