திங்கள், 13 ஜூலை, 2009

சிறப்புப் போலீஸôரின் பயிற்சியில் "மாற்றம்' வருமா?

மிழக காவல் துறையில் உள்ள சிறப்பு காவல்படையினருக்கான (டி.எஸ்.பி.) பயிற்சித் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற மோதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின்போது இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்தகைய கருத்து வலுபெற்று வருகிறது.


அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்கும் வகையில் தங்கள் உத்தரவை கண்மூடித்தனமாக ஏற்று செயல்படும் விதமாக காவல்படையினருக்கான பயிற்சிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன.


எதிரில் இருப்பவர் யார் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் தலைமையின் உத்தரவுப்படி தடியடி நடத்தியோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்திருந்தன.


நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காவல் துறையில் அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. மேலும், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.


ஆனால், சிறப்பு காவல்படையினருக்கான பயிற்சித் திட்டத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரிகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.


தற்போது தமிழக காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பேர் ஆயுதப் படையின் சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி.) போலீஸôராக உள்ளனர். இவர்களுக்கு ஆவடி, வேலூர், மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள முகாம்களில் 9 மாதங்கள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.


தலைமையின் உத்தரவை அப்படியே நிறைவேற்றும் வகையில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போதுதான் கட்டுப்பாடு இருக்கும் என இதற்கு காரணம் கூறப்படுகிறது.


பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் பேரணி, மாநாடு, முக்கிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பாதுகாப்புப் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


பாதுகாப்புப் பணி நீங்கலாக இவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப் படை மற்றும் அவசரகால அதிரடிப் படை என பிரிக்கப்பட்டு வன்முறை நிகழும் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தேர்தல் உள்ளிட்ட சில சமயங்களில் ஆட்சியாளர்களின் பாராட்டைப் பெற்றாலும், வழக்கறிஞர்- போலீஸ் மோதல் உள்ளிட்ட பல சமயங்களில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகும் வகையிலும் அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவே இவர்களது செயல்பாடு அமைந்துள்ளது.


இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியே இதற்கு அடிப்படை காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஓர் இடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அங்கு வன்முறை வெடிக்க காரணமாக இருக்கின்றனர். இது போன்ற சமயங்களில் சிறப்புப் போலீஸôர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தும்போது, வன்முறையில் ஈடுபடாத மற்றவர்கள் போலீஸôர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.


இதன் காரணமாக பிரச்னைக்கு காரணமான நபர்கள் தப்பித்துவிடுவதுடன், அப்பாவி பொது மக்களுக்கும், போலீஸôருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.

இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாகாமல் தடுக்க சிறப்பு காவல்படை போலீஸôருக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகளை நவீன கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

1 கருத்து:

  1. அன்பு நண்பரே நல்ல கருத்தை வெளியுட்டீர்கள் பயிற்சியில் கண்டிப்பாக மாற்றம் தேவை. எனது வலைப் பதிவையும் பார்க்கவும் "kaaval.blogspot.com" நன்றி.

    பதிலளிநீக்கு