வெள்ளி, 3 ஜூலை, 2009

சிறப்பு ஊதியம் நிர்ணயிப்பதில் குழப்பம்: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் அதிருப்தி

சென்னை, ஜூலை 2: 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பிறகும் தங்களுக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் புகார் தெரிவித்தனர்.


தமிழகத்தில் காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் போலீஸôருக்கு 20 சதவீதமும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôர் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த நிலையில், 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராக இருந்த திலகவதி பரிந்துரையின் அடிப்படையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதற்கு ஒப்புதல் அளித்தார்.


இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôருக்கு அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீங்கலாக, மற்ற அனைவருக்கும் இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.


அடிப்படை ஊதியம் உயரும் போது...: அடிப்படை ஊதியத்தில் மாற்றம் வரும்போது 15 சதவீத சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.


இது குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரகம் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அடிப்படை ஊதியத்தில் மாற்றம் ஏற்படும்போது சிறப்பு ஊதியத்திலும் மாற்றம் இருக்கும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை விளக்கம் அளித்தது.


மீண்டும் குழப்பம்:

இந்த நிலையில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி ஜூன் 1-ம் தேதி முதல் அமலாக்க அரசு உத்தரவிட்டது.


இதற்கான அரசாணையில், "உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் இப்போதுள்ள அளவிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படுவது தொடரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு ஊதிய உயர்வு வரும்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôருக்கு பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் கணக்கிடப்படும் என நிர்வாகப் பிரிவு தெரிவித்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.


இது குறித்து போலீஸôர் அப் பிரிவு இயக்குநர் ஏ.டி.ஜி.பி. ராமானுஜத்திடம் முறையிட்டனர்.


"அரசின் கொள்கை முடிவு தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிட முடியாது' என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதிருப்தி:

சிறப்பு ஊதியம் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவில் நிர்வாகப் பிரிவினரின் செயல்பாடுகள் குறித்து, இதரப் பிரிவு போலீஸôரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால், அடிப்படை ஊதியம் உயர்ந்த பிறகும் பழைய ஊதியத்தின் அடிப்படையிலேயே சிறப்பு ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக