திங்கள், 20 டிசம்பர், 2010

5 எஸ்பிக்கள், 5 டிஐஜி-க்களுக்கு விரைவில் பதவி உயர்வு

 தமிழக காவல் துறையில் 5 எஸ்.பிக்கள், 5 டி.ஐ.ஜிக்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 ஐ.ஜி நிலையில் பணியாற்றி வந்த சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை ஐஜி ஜே.கே. திரிபாதி, கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழக கண்காணிப்பு பணிக்கான ஐ.ஜியான கே. முத்துக்கருப்பன், கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கண்காணிப்புக்கான ஐ.ஜியான ஐ. ராஜா, காவல்துறை தலைமையக ஐஜி சி.கே. காந்திராஜன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக காவல் துறையில் 5 ஐஜி பதவியிடங்கள் காலியானது.
 
ஐஜி பதவி பெற காத்திருக்கும் டிஐஜிக்கள்: 
 
இவ்வாறு பதவியிடங்கள் காலியாகும்போது, பணி மூப்பு அடிப்படையில் டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதன்படி தற்போது, 1993-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளில் தற்போது டிஐஜிக்களாக உள்ளவர்களுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதில், சி.பி.ஐ.யில் சென்னை மண்டல டிஐஜியாக உள்ள சு. அருணாச்சலம், மாநகர போலீஸில் மத்திய சென்னை துணை கமிஷனராக உள்ள பி. தாமரைகண்ணன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தகுதி பெறுகின்றனர். இவர்களில் அனைவருக்கும் ஐஜி பதவி உயர்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
டிஐஜி பதவி பெற காத்திருக்கும் எஸ்பிக்கள்: இவர்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெறும் நிலையில், அடுத்து எஸ்பி நிலையில் உள்ளவர்களுக்கு டிஐஜி பதவி வழங்கப்பட வேண்டும். பொதுவாக ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் பணியில் சேரும் அதிகாரிகள் 13 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்த பின்னர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற வேண்டும். இதன்படி, ஏற்கெனவே, 13 ஆண்டுகால பணியை பூர்த்தி செய்ததன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கே.பி. சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் டிஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, 1997-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து 13 ஆண்டு பணியை பூர்த்தி செய்யும் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் மாநகர போலீஸில் மயிலாப்பூர் துணை கமிஷனராக உள்ள கே. பெரியய்யா, ரயில்வே போலீஸ் எஸ்பியாக உள்ள ஏஜி மெüரியா, மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனராக உள்ள கே.என். சத்தியமூர்த்தி, மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள சி. ஸ்ரீதர், சென்னையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.யாக உள்ள எஸ். முருகன், புறநகர் போலீஸில் பரங்கிமலை துணை கமிஷனராக உள்ள வி. வரதராஜு, அடையார் துணை கமிஷனராக உள்ள எம்.சி. சாரங்கன் உள்ளிட்ட 14 அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனர். 
 
அரசு நடவடிக்கை தொடக்கம்:
 
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தொடர்பாக தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு தகுதி பெறும் அனைவருக்கும்  பதவி உயர்வு வழங்க வாய்ப்புகள் உள்ளன. 
 
இருந்தாலும், தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் சிலரை தவிர்த்து மற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கலாம். இருப்பினும், இவர்களில் 5 எஸ்பிக்களும், 5 டிஐஜிக்களும் பதவி உயர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று அடுத்த சில மாதங்களில் இந்த பதவி உயர்வு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

மின்னக்கல் மின்னல்!

 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மின்னக்கல். நெசவுத் தொழில் சார்ந்த இந்தக் கிராமத்தின் பெயரை சிற்றலை வானொலி நேயர்கள் மட்டுமல்லாது பல்வேறு வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களிடையேயும் தனது செயல்பாடுகள் மூலம் பிரபலமாக்கியுள்ளார் இ. செல்வராஜ். நெசவுத் தொழிலாளியான இவர் அப்படி என்ன செய்தார்? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது இயல்புதான்.
அவரே சொல்கிறார்..

""கைத்தறி நெசவுத் தொழிலாளியின் மூத்த மகனாகப் பிறந்தேன். குடும்பச்சூழல் காரணமாக பள்ளி இறுதி வரையே படிக்க முடிந்தது. அதன் பின்னர் தந்தையின் அறிவுரைப்படியும் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட வேண்டிய காரணத்தாலும் விசைத்தறி தொழிலாளியாக மாறினேன்.
எனது பள்ளிப்பருவம் முதல் வீட்டிலேயே கைத்தறி நெசவு செய்து வந்த தந்தை வானொலி கேட்பதில் ஆர்வம் உடையவர். அதனால் எனக்கும் வானொலி கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வெவ்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணியை முதலில் பொழுதுபோக்காகத் தொடங்கினேன்.
அப்போது, அகில இந்திய வானொலி, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, வேரித்தாஸ் வானொலி ஒலிபரப்பு உள்ளிட்டவற்றின் நேயர் வட்டங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த வட்டங்களில் இருப்பவர்கள் தாங்கள் நேயர்களாக உள்ள வானொலி ஒலிபரப்பு நிறுவனத்திடம் இருந்து வரும் தகவல்களை, அந்தந்த வட்டங்களில் உள்ள மற்ற நேயர்களுக்கு செல்போன் குறுந்தகவல் சேவை மூலம் தெரிவித்து வருவதை அறிந்தேன்.
இப்படி ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் தகவலை மட்டும் என்றில்லாமல், வானொலி ஒலிபரப்பு குறித்த புதிய மற்றும் அரிய தகவல்களைத் திரட்டலாமே என்று தோன்றியது. இணையதள வசதி இல்லாத மின்னக்கல் கிராமத்தில் இருந்து இது எப்படிச் சாத்தியமாகும்? கணினி பயன்பாடு குறித்த எவ்வித அறிமுகமோ, பயிற்சியோ இல்லாத என்னால் எப்படி முடியும்? அதற்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையாயிற்றே என்பன போன்ற கேள்விகளே முதலில் எழுந்தன.
செல்போன் மூலமே இணையதளத்தைப் பயன்படுத்தும் முறையினையும் அறிந்து கொண்டேன். உள்ளூர் வானொலி முதல் உலக அளவில் உள்ள வானொலி ஒலிபரப்புகள் குறித்த அனைத்து புதிய தகவல்களையும் திரட்ட தொடங்கினேன்.
இவ்வாறு, சிற்றலை வானொலி ஒலிபரப்புகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிய சமயத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்த நேயர்களின் செல்போன் எண்களுக்கு, நான் அறிந்த விவரங்களை குறுந்தகவல்களைக அனுப்பத் தொடங்கினேன்.
இத் தகவல்களைப் பெற்றவர்கள், அதன் மதிப்பை உணர்ந்து பிறருக்கும் அனுப்பத் தொடங்கினர். இவ்வாறு மூன்றாவது நபராக தகவல்களை பெற்றவர்களில் பலரும் என்னை தொடர்புக் கொள்ள முயன்றனர்.
அப்போதுதான் சிற்றலை வானொலி ஒலிபரப்பு குறித்த தகவல்களுக்கு நேயர்களிடம் உள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். இதையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொருவரின் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் செல்போன் எண்களையும் பெற்று அவற்றுக்கு, வானொலி ஒலிபரப்புகள் குறித்த விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பி வருகிறேன். எனது ஆர்வத்துடன் தொடர்புடைய விஷயம் என்பதால் எவ்வித தொய்வும் இன்றி இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நேயர்கள் நேரடியாக குறுந்தகவல்களை என்னிடம் இருந்து பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் வானொலி ஒலிபரப்பு சார்ந்த 2,300-க்கும் மேற்பட்ட தகவல்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களாக நேயர்களுக்கு கிடைக்கச் செய்திருக்கிறேன்.
சிற்றலை வானொலி ஒலிபரப்பு நிலையங்களின் புதிய நிகழ்ச்சிகள், செயின்ட் ஹெலினா, புலிகளின் குரல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிற்றலை வானொலி நிலையங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒலிபரப்பை மேற்கொள்ளும். அது எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த அலைவரிசையில் இருக்கும் என்ற விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பும் போது, அது நேயர்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துவிடுகிறது.
இதனால் ஏற்பட்ட நன்மை என்று சொன்னால் பல வானொலி நேயர்களுக்குச் சிற்றலை நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. செயின்ட் ஹெலினா சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பிக்கப் போவதை முதன் முதலில் நான்தான் நேயர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். இப்படி பல அரிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் நேயர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
இது தவிர குறிப்பிட்ட ஏதாவது ஒலிபரப்புகள் குறித்து நேயர்கள் கேட்கும் புதிய மற்றும் பழைய தகவல்களையும் வழங்கி வருகிறேன். இவ்வாறு நான் அனுப்பிய சில தகவல்கள் குறித்து அறிந்து அது தொடர்பான கூடுதல் தகவல்கள் கேட்டு அகில இந்திய வானொலி நிலையம் உள்ளிட்ட சில வானொலி நிலையத்தைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பயனடைந்துள்ளனர்.
குறுந்தகவல்களாக அனுப்புவதுடன் நிற்காமல், இவ்வாறு அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, அதற்கென செல்போன் வழி இணையதள சேவை மூலம் உருவாக்கப்பட்ட எனது வலைப்பூவிலும் (www.dgsmsnet.blogspot.com) வெளியிட்டு வருகிறேன்'' என்கிறார் செல்வராஜ்.

திங்கள், 6 டிசம்பர், 2010

சாகித்ய அகாதெமியை வெளியேற்ற தமிழக அரசு நெருக்கடி!

சென்னை தரமணியில் உள்ள அலுவலகத்தை காலி செய்யுமாறு சாகித்ய அகாதெமிக்கு தமிழக அரசு நெருக்கடி அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய மொழிகளில் கலை, பண்பாட்டு வளர்ச்சியில் இலக்கியம் சார்ந்த பணிகளை ஊக்குவிப்பது, அங்கீகரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 1952-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி கொண்டதாக 1954-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட தெனிந்திய மொழிகளுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிறமொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது, தமிழில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை பிறமொழிகளில் மொழிபெயர்க்க உதவுவது, என இந்த மையம் ஆற்றிய பணிகள் எழுத்துலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது.
இன்றளவும் சாகித்ய அகாதெமி விருது என்பது இலக்கிய படைப்பாளர்கள் மத்தியில் மணிமகுடமாகவே உள்ளது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியான சிறந்த படைப்புகள் அனைத்தையும் கொண்ட நூலகமும் அதன் ஒரு பகுதியுமே சாகித்ய அகாதெமியின் அலுவலகமாக அறியபட்டு வருகிறது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், அதிக புத்தகங்களுக்கான இடவசதி உள்ளிட்ட தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாத நிலையில் 1990-ம் ஆண்டு சென்னையில் இருந்து மண்டல அலுவலகம் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தது.
இதனால் தமிழ் இலக்கியம் சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து தமிழ் எழுத்தாளர்கள் தலைமையகத்துக்கு தெரிவித்து தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் இருந்து ஒரு பிரிவை சென்னையில் செயல்பட ஏற்பாடு செய்தனர்.
இதற்கு தகுதியான இடம் கிடைக்காத நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சிலர் முன்முயற்சிகள் மேற்கொண்டனர்.
சென்னை பிரிவு தொடக்கம்: இதன் பலனாக தரமணியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கவின்கலை கல்லூரி மாணவர்களின் பழைய விடுதி வளாகத்தின் ஒருபகுதியை சாகித்திய அகாதெமிக்கு வழங்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகக்குழு முடிவு செய்தது. அந்த விடுதியில் 10 அறைகள் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகிய பகுதிகள் சாகித்திய அகாதெமிக்கு ஒதுக்கப்பட்டது.
இதன்படி, 2000-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன், சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகம் மற்றும் நூலக வளாகத்தை தரமணியில் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்றனர்.
அந்த கட்டடத்தில் நிலவிய பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகத்தின் ஒரு பகுதி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும், இதன் மற்ற அலுவல் பணிகளும் நூலகமும் தரமணி வளாகத்திலேயே தொடர்ந்து செயல்பட்டுவந்தது.
வெளியேற்ற அரசாணை: இந்த அலுவலக வளாகத்தை காலி செய்ய வேண்டும் என 2007-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் குறிப்பிட்ட சில துறைகள் சாகித்ய அகாதெமிக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதங்கள் அனுப்பி வந்தன.
இந்த நிலையில், தரமணி வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவை அங்கிருந்து வெளியேற்றி அந்த கட்டடத்தை காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு அரசாணையை (எண்: 45) தமிழக அரசின் உயர்கல்வித்துறை 2008 பிப்ரவரி 20-ம் தேதி பிறப்பித்தது.
இது குறித்து மறுபரிசீலனை செய்து சென்னை பிரிவு தொடர்ந்து தரமணியில் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி சாகித்திய அகாதெமியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து, சாகித்ய அகாதெமிக்கு 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அலுவலக வளாகத்துக்கான நிலமும், அரங்கம் அமைக்க 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிலமும் அளிக்குமாறு சாகித்ய அகாதெமியின் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான நல்ல முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், சாகித்ய அகாதெமியை தரமணி வளாகத்தில் இருந்தும் வெளியேற வற்புறுத்தும் கடிதங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன.
கடைசியாக கடந்த 30-ம் தேதியும் தொழில்நுட்பக் கல்வித்துறையிடம் இருந்து இத்தகைய கடிதம் ஒன்று சாகித்ய அகாதெமிக்கு வந்துள்ளது. இதனால் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் சென்னையில் இருப்பதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் கருத்து: இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிக்கான ஆலோசனைக்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான ராமகுருநாதன் கூறியது:
கடந்த 2000-ம் ஆண்டு தரமணியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்ற அப்போதைய தமிழக அமைச்சர் தமிழ்குடிமகன், நுங்கம்பாக்கத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் சாகித்திய அகாதெமிக்கு நிலம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அந்த உறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையை அடுத்து வேறு வாடகை கட்டடத்தையாவது பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார். வேறு வழியே இல்லையென்றால் தமிழகத்தில் சாகித்ய அகாதெமி செயல்பட முடியாத சூழ்நிலை எழக்கூடும் என்பதையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
செம்மொழி மாநாடு நடத்தி, செம்மொழி நூலகத்துக்காக தமிழக சட்டப் பேரவையின் பழைய வளாகத்தையே அளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழில் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிவரும் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகத்தை மீண்டும் தமிழகத்தை விட்டு வெளியேற விடமாட்டார் என தமிழ் எழுத்தாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் மூடப்பட்டால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைந்துவிடும் என்பதுகூடவா அரசு அதிகாரிகளுக்குப் புரியவில்லை.

திங்கள், 29 நவம்பர், 2010

832 எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல்

தமிழக காவல் துறையில் புதிதாக தேர்வு நடத்தி 832 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
தமிழக காவல் துறையில் பட்டதாரி இளைஞர்கள் சேர்வதற்கான முதல்கட்ட நேரடி வாய்ப்பாக உதவி ஆய்வாளர் பதவி அமைந்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலமே இதற்கு தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளி படிப்பை முடித்து இரண்டாம் நிலை காவலர்களாக சேர்பவர்களும், பட்டப்படிப்பு முடித்து உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வுபெறுகின்றனர். அதனால், பட்டதாரி இளைஞர்கள் மட்டுமல்லாது காவல் துறையில் சேர்ந்த பின்னர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மத்தியிலும் உதவி ஆய்வாளர் பணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல் துறையில் 767 ஆண்கள், 328 பெண்கள் என மொத்தம் 1,095 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டது.
ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் எழுத்துத்தேர்வும், ஆகஸ்ட் 17-ம் தேதி உடல் தகுதித்திறன் தேர்வு உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக வளாகத்தில் கடந்த மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதனையடுத்து, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் விசாரணைக்குப் பின் தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
அடுத்தத் தேர்வு எப்போது? இந்த நிலையில், போலீஸ் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அடுத்த தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு பட்டதாரி இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே காவல் துறையில் ஆயிரத்துக்கும் அதிகமான உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, 832 உதவி ஆய்வாளர் பணியிடங்களை 2010-2011 ஆண்டில் நிரப்ப காவல் துறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப் பிரிவில் 717 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தொழில்நுட்பப் பிரிவில் 115  உதவி ஆய்வாளர் பணியிடங்களும் இதில் அடங்கும். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஏற்கெனவே காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக உள்ளவர்களில் தகுதியுடையோருக்கு ஒதுக்கப்படும்.
கொள்கை அளவிலான அரசின் ஒப்புதலை அடுத்து நிர்வாக ரீதியான அனுமதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்துக்கு வரவேண்டியுள்ளது.
இந்த அனுமதி வந்தவுடன் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆணையர்கள் பற்றாக்குறையால் முடங்கும் தகவல் ஆணையம்

தகவல் ஆணையர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். 
 அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் அமலாக்கத்துக்காக மாநில அளவிலான தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. 2006-ல் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டது.
 ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எஸ். ராமகிருஷ்ணன் தலைமைத் தகவல் ஆணையராகவும், ஜி. ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் தகவல் ஆணையர்களாகவும் 28-01-2006-ல் நியமிக்கப்பட்டனர்.  இதன்பின்னர், மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், முதல்வரின் முன்னாள் செயலாளர் டி.ஆர். ராமசாமி, பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் 7-5-2008-ல் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
 தகவல்பெறும் உரிமைச் சட்டப்படி மாநிலத் தகவல் ஆணையத்தில் தேவைக்கு ஏற்ப 10 ஆணையர்கள் வரை நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், தமிழ்நாடு மாநிலத்தகவல் ஆணையத்தில் 7 பேர் அளவுக்கே தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், மனுதாரர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், தகவல் ஆணையர் ரத்தினசாமி 12-05-2009-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஒரு பதவியிடம் காலியாக இருந்தது.  தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி செப்டம்பர் 1-ம் தேதி தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.  இதையடுத்து மற்றொரு தகவல் ஆணையரான ஜி. ராமகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஒய்வு பெற்றார். இந்த நிலையில் தகவல் ஆணையர் டி.ஆர். ராமசாமி அக்டோபர் 30-ம் தேதி காலமானார்.  இப்போது தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

 தலைமைத் தகவல் ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் நிர்வாகப் பணிக்கு இடையில், புதன்கிழமை தோறும் மனுக்களை விசாரித்து உத்தரவுகளை வழங்கிவந்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து அப்பதவிக்கு வந்த கே.எஸ்.ஸ்ரீபதி பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியான பணிகளை மட்டுமே ஆய்வு செய்து வருவதால், எஞ்சியுள்ள 3 தகவல் ஆணையர்களே அனைத்து மனுக்களையும் விசாரித்து உத்தரவுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  தகவல் ஆணையர்கள் பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகிய 3 பேர் மட்டுமே இப்போது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.

 ஆனால், இதே சமயத்தில் முன்பு இருந்ததைவிட மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த 3 ஆணையர்களுக்கும் பணிச்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக, தகவல் ஆணையர்களால் மேல் முறையீட்டுக்காக வரும் மனுக்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தி குறிப்பிடத்தக்க வகையில் உத்தரவுகள் வழங்குவது இயலாத ஒன்றாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு மனு மீதான விசாரணையும் ஓரிரு நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டு மேலெழுந்தவாரியாக தொடர்புடைய துறையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால், தொடர்புடைய பொதுத் தகவல் அதிகாரி மீதான மனுதாரரின் குற்றச்சாட்டு என்ன என்பதை தகவல் ஆணையர்கள் முழுமையாகக் கேட்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் ஆணையத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவசரகதியில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் பல ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருப்பதால் மனுதாரர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

சிற்றலை நேயர்களின் சங்கமம்!

சிற்றலை நேயர்களின் சங்கமம்!

வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சமாகிப்போனது.  துல்லியமான டிஜிட்டல் ஒலிபரப்பு, இணையதளம் மூலமான ஒலிபரப்பு, செயற்கைக்கோள் மூலமான ஒலிபரப்பு, பண்பலை வானொலி, சிற்றலை வானொலிகளுடன் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளும் சேர்ந்து அறுசுவை விருந்து வைக்கின்றன.  இது குறித்து சர்வதேச வானொலி பத்திரிகை ஆசிரியர் ஜெயசக்திவேலிடம் பேசினோம்...
""வானொலி ஒலிபரப்பில் மத்திய அலை, பண்பலை ஆகியவை மூலம் அதிக தொலைவுள்ள பகுதிகளுக்கு ஒலிபரப்பு செய்ய முடியாது. ஆனால் சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும்.
சிற்றலை வானொலி ஒலிபரப்பின் அடிப்படையில் ஹாம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வானொலி ஒலிப்பரப்பு முறை உருவாகி உலகம் முழுவதும் பிரபலமானது.
அதனாலேயே, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் சிற்றலை வானொலி நேயர்களாக மாறுவதும், சிற்றலை நேயர்கள் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களாக மாறுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.
மத்திய அலை, பண்பலை ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க சிற்றலை ஒலிபரப்பு அவசியம் என்பதால் எல்லா நாடுகளிலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இத்தகைய ஒலிபரப்புகளை கேட்பவர்கள் அந்த நிகழ்ச்சி மற்றும் அது ஒலிபரப்பான அலைவரிசை, நேரம் உள்ளிட்ட விவரங்களை அந்த நிலையத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அந்த விவரங்களைச் சரிபார்த்து, அதற்கான அடையாள அட்டை (க்யு.எஸ்.எல்.) சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தில் இருந்து நேயருக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு, பல்வேறு ஒலிபரப்புகளை கேட்டு, அதற்கான அடையாள அட்டைகளைச் சேகரிப்பது அஞ்சல் தலை சேகரிப்பு போல மிகவும் பிரசித்தமானது.
இத்தகைய சிற்றலை நேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் சிற்றலை வானொலி நேயர் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் தற்போதைய நிலையில் நியுசிலாந்தில் உள்ள நேயர் மன்றம் மிகவும் பழமையானது. அதனை அடுத்து ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் நேயர் மன்றங்கள் வருகின்றன.
இந்த நேயர் மன்றங்கள் சார்பில் சர்வதேச அளவிலும், அவ்வப்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களும் நேயர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.
இதில் பென்சில்வேனியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் சிற்றலை நேயர்கள் பங்கேற்ற கூட்டம் என இது சிறப்பு பெற்றது.
இதுவரை வெளிநாடுகளிலேயே இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிற்றலை நேயர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமலேயே இருந்துவந்தது.
தற்போது இப்படிப்பட்ட நேயர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அரிய நிகழ்வு அண்மையில் பொள்ளாச்சியின் புளியம்பட்டியில் நடந்தது. அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர் சங்கங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில்  60-க்கும் மேற்பட்டோர் சிற்றலை நேயர்கள் எனப் பதிவு செய்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.  இவர்களைத் தவிர அமெச்சூர் ஒலிபரப்பில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த சிற்றலை நேயர் மன்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றது சிறப்பாக அமைந்திருந்தது.
அரிதானது எனக் கருதப்படும் தொலைதூரத்தில் உள்ள சிறிய சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற கியு.எஸ்.எல். அட்டைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது'' என்றார்.
""சிற்றலை வானொலி கேட்பது என்பது, வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, முதலில் பல்வேறு மொழிகளை அடையாளம் காண உதவும் ஒரு பெரிய கருவியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகு, வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக அமைந்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வானொலி நேயர் மன்றங்கள் மூலம் சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் எங்களிடம் பிரபலமானது. ஜப்பானியர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பழக்கம் ஊக்கமளித்தது என்றால் அது மிகையல்ல.
ஆனால், புதிய தலைமுறையினரிடம் போதிய ஊக்கமின்மை காரணமாக சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் மெல்ல மெல்ல நலிந்து வருவது எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது'' என ஜப்பானில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் நிர்வாகக் குழு
உறுப்பினர் தோஷிமிச்சி ஹோடாகே கூறினார்.
தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களில் சுமார் 50 லட்சம் பேர் சிற்றலை வானொலி நேயர்களாக உள்ளனர்.
""ஜெயின்ட் ஹெலினா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, வாய்ஸ் ஆப் துருக்கி, ரேடியோ ருமேனியா உள்ளிட்ட பல நிலையங்களின் ஒலிபரப்புகள் தமிழக சிற்றலை நேயர்களிடம் பிரபலமானதாக உள்ளன. இருப்பினும், புதிய தலைமுறை அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் பலரிடம் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்னமும் பிரபலமாகாத ஒன்றாக மாறிவருகிறது. இத்தகைய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை அடுத்த தலைமுறையினருக்குப் புரியவைக்க முடியும்'' என்றார் ஜெய சக்திவேல்.


செவ்வாய், 9 நவம்பர், 2010

காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு: 6 வாரங்களுக்குள் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளில் காணப்படும் அடிப்படை வசதி குறைபாடுகளை 6 வாரங்களுக்குள் சரி செய்து, அதுகுறித்து தெரிவிக்குமாறு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 தமிழக காவல்துறையில் காவலர் முதல் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு பிரிவுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
 இவர்களுக்கான குடியிருப்பு மற்றும் காவல்துறை சார்ந்த கட்டுமான திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 இந்தக் கழகம் மூலம் இதுவரை 26,385 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்னர் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்டதுடன் சேர்த்து மொத்தம் 45,847 குடியிருப்புகள் கட்டப்பட்டு காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 மொத்தம் உள்ள காவலர்களில் இதுவரை 43.75 சதவீதம் பேருக்கான குடியிருப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 3,953 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 3.77 சதவீத காவலர்களின் குடியிருப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
 இவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடுபெறும் காவலர்களின் மாத ஊதியத்தில் இருந்து குடியிருப்புக்கான வாடகை என குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
 இந்த குடியிருப்புகளில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் பொறுப்பாகும். ஆனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சில குடியிருப்புகளில் இந்தக் குறைபாடு காரணமாக பெரும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
 இது தொடர்பாக எந்தக் காவலராவது புகார் தெரிவித்தால், புகாரை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அந்தக் காவலர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இந்தக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் ஆண்டு திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும், உரிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இந்த நிதி என்ன ஆகிறது என்பது புதிராக உள்ளது.
 சில இடங்களில் காவலர் குடும்பத்தினரே தங்கள் செலவில் அடிப்படை வசதிகளை சரி செய்துகொள்கின்றனர். இது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்கின்றனர் காவலர் குடியிருப்புவாசிகள்.
 மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு:
 அரசு மற்றும் காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் இந்த அணுகுமுறை காவலர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது விஷயத்தில் உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சமி நில மீட்புப் படையின் மாநிலத் தலைவர் பி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
 மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு:
 இந்த மனு, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி முன்னிலையில் வழக்காக பதிவு (எண்: 8672-2010-சிபி) செய்யப்பட்டு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
 விசாரணைக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பான இந்த மனு டிஜிபி அலுவலகத்தில் உள்ள நிர்வாகப்பிரிவு ஏடிஜிபிக்கு அனுப்பப்படுகிறது. இது குறித்து விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுóக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் மனித உரிமைகள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


By வி.கிருஷ்ணமூர்த்தி 

புதன், 27 அக்டோபர், 2010

பத்திரப்பதிவு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள்: பதிவுத்துறைத் தலைவர் ஆணை

தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் இயங்கும் சார்-பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதி தொடர்பான குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும் என பதிவுத்துறை தலைவர் டி. சபிதா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சார்பில், அனைத்து துணை பதிவுத்துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடந்த 21-ம் தேதியிட்ட சுற்றறிக்கை விவரம்:

தமிழகம் முழுவதும் வாடகை மற்றும் அரசு கட்டடங்களில் செயல்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் கழிவறை, ஓய்வு அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் பி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை வழக்காகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதிவுத்துறை தலைவருக்குக் கடந்த மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது.

தினமணியில் செய்தி: 

மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கடந்த 12-ம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து இப்பொருள் பதிவுத்துறை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

1. தமிழகம் முழுவதும் தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மற்றும் பதிவு பணிக்காக வரும் பொது மக்களுக்கு கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதிகள் ஆகியவற்றை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும்.

2. கழிவறைகள் நீர் வசதியுடன் அமைக்கப்பட்டு சுகாதாரத்தைப் பேணி காக்கும் வகையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

3. பணியாளர்களுக்கும், பதிவுப்பணிக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வசதி செய்யப்பட வேண்டும்.

4. இவ்வசதிகள் இல்லாத அலுவலகங்களில் கட்டட உரிமையாளர்களிடம் எழுத்து பூர்வமான கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கையை அந்தந்த அலுவலகத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்படி அந்தந்த கட்டட உரிமையாளர் மூலம் உரிய வசதிகள் செய்யப்படாவிடின், இத்தகைய வசதிகள் கொண்ட வேறு தனியார் கட்டடத்துக்கு அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

5. மாவட்டப் பதிவாளர் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இன்றி சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருவது தெரிய வந்தால், அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளருக்கு எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும் அந்தந்த மாவட்டப் பதிவாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

6. தனியார் கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்கள் வேறு தனியார் கட்டடத்துக்கு மாற்றம் செய்யும்போது, கழிவறை, குடிநீர், ஓய்வு அறை ஆகிய அடிப்படை வசதிகள் கொண்ட கட்டடங்களையே தேர்வு செய்து மாற்ற வேண்டும்.

7. அரசு கட்டடங்களில் இயங்கிவரும் பதிவுத்துறை அலுவலகங்களிலும், பணியாளர்களுக்கும், அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும் கழிவறை, குடிநீர், ஓய்வு அறை, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இந்த வசதிகள் இல்லாத அலுவலகங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தித்தர உரிய மதிப்பீட்டறிக்கைகளை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் இருந்து பெற்று முன்னுரிமைப் பட்டியல்கள் பதிவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், பதிவுத்துறை துணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் பதிவுத்துறை அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பாக புகார்கள் எழா வண்ணம் செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் பதிவுத்துறை தலைவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.










வெள்ளி, 15 அக்டோபர், 2010

போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு

தமிழக காவல் துறை தலைமையகத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ÷அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க உதவும் வகையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.  ÷பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பல பிரச்னைகளுக்கு, இந்த சட்டத்தின் உதவியுடன் மக்கள் பெற்ற தகவல்களால் தீர்வு ஏற்பட்டது.  ÷இந்த சட்டத்தின் 24 (2) வது பிரிவின்படி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களும், 8 (1) (எச்) பிரிவின்படி விசாரணையில் குற்ற வழக்குகளின் முக்கிய தகவல்களையும் பாதுகாக்க சட்டத்தில் விலக்கு தரப்பட்டுள்ளது.  ÷நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.  ÷இதன்படி, தமிழக காவல் துறையில் உளவு மற்றும் தேச பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய பிரிவுகளுக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுவிட்டன.  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு: தமிழகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநில கண்காணிப்பு ஆணையத்துக்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து 2008 ஆகஸ்டில் தமிழக அரசு உத்தரவிட்டது.  ÷அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை பொது மக்கள் தெரிந்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.  ÷இருப்பினும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை விவரங்களை தெரிந்துக் கொள்வதைத் தடுக்கவே இந்த விலக்கு அளிக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.  ÷இருப்பினும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த அனைத்து மனுக்களையும் இந்த விலக்கு ஆணையை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத் துறை திருப்பி அனுப்பி வருகிறது.  ÷இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதில், ஒரு குறிப்பிட்ட மனு தொடர்பாக வந்த மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் விசாரித்தது.  ÷கடந்த ஆண்டு இந்த மனுவை விசாரித்த தமிழக தலைமை தகவல் ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன், விலக்கு ஆணை இருந்தாலும் மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  மீண்டும் விலக்கு ஆணை: இந்த நிலையில் தமிழக காவல் துறையில் காவலர் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை உள்ள அனைத்து அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிப்பது, மேலும், துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் டிஜிபி அலுவலகத்தில் உள்ள ரகசிய மற்றும் நம்பகப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ÷அண்மைக்காலமாக தமிழக காவல் துறையில் குறிப்பாக ஐஜி, ஏடிஜிபி நிலையில் உள்ள சில அதிகாரிகள் மீது புகார்கள் வந்துள்ளன.  ÷இந்தப் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும்.  அரசாணை வெளியீடு: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த டிஜிபி அலுவலகத்தின் ரகசிய மற்றும் நம்பகப் பிரிவுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுடன் இதற்கான அரசாணை (உள்துறை எண்: 854) கடந்த 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என உள்துறை முதன்மை செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்தார்.  ÷கடந்த ஏப்ரல் 8-ம் தேதியிட்ட டிஜிபியின் கடிதத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 24(4)-ன் படி இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆர்வலர்கள் அதிர்ச்சி: ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.  ÷தகவல் பெறும் உரிமை சட்டத்தை முடக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

திங்கள், 4 அக்டோபர், 2010

ஏடிஜிபி இல்லாத தமிழக உளவுப் பிரிவு!

தமிழக காவல் துறையில் உளவுப் பிரிவுக்கான ஏடிஜிபி பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது.  தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை என்ற உளவுப் பிரிவு மிக முக்கியமானது.  இடதுசாரி தீவிரவாதிகள், குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), இலங்கை தமிழ் ஈழப் போராளிகள், நக்சல் ஆகியோர் குறித்த தகவல்களைச் சேகரிப்பதுடன், அத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை "க்யூ' பிரிவு மேற்கொண்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில், கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகவும் இப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத அடிப்படைவாதம், பயங்கரவாத அமைப்புகள், மதரீதியான பிரசார மையங்கள்,  தடை செய்யப்பட்ட வகுப்புவாத அமைப்புகள், அடிப்படைவாத அமைப்புகள் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (எஸ்பிசிஐடி) உளவு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு:  முதல்வர் உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், மத்திய, மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக தொடங்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையும் உளவுப் பிரிவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.அதிகாரிகள் விவரம்:  இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் இப் பிரிவு ஒரு ஏடிஜிபி, 2 ஐஜி, 1 டிஐஜி, 5 காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமையிடத்திலும்,  மாவட்டங்களில் கீழ் நிலை அதிகாரிகள் தலைமையிலும் செயல்பட்டு வருவதாக தமிழக அரசின் காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக காவல் துறையில் உளவுப் பிரிவு இப்போது, ஜாபர் சேட், சங்கர் ஜிவால் ஆகிய 2 ஐஜிக்கள் தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்பிசிஐடி, பாதுகாப்புப் பிரிவு சிஐடி, பொதுவான உளவு பணிகளை மேற்கொள்ளும் பிரிவுகள் 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட் தலைமையில் செயல்பட்டு வருகிறது.  க்யூ பிரிவு, சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை உள்ளிட்டவை 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் தலைமையிலும் செயல்படுவதாக காவல் துறையின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், விழுப்புரம் அருகே ரயில்பாதையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு க்யூ பிரிவு போலீஸôரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இத்தகைய சமயங்களில் வழக்கு விசாரணை குறித்து ஏடிஜிபி நிலையிலான அதிகாரி மட்டும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், இப்பிரிவில் ஏடிஜிபி இல்லாததால் உளவு பிரிவில் இருக்கும் அதிகாரிகளில் மூத்த அதிகாரி என்ற அடிப்படையில் ஜாபர் சேட் செய்தியாளர்களை சந்தித்தார். ஏடிஜிபி பதவி காலியாக இருப்பதால் முக்கியமான பல்வேறு சமயங்களில் யார் முடிவெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு முதல்...  2006-ம் ஆண்டு முதல் ஏடிஜிபி சேகர் உளவுப் பிரிவின் ஏடிஜிபியாக பதவி வகித்து வந்தார். 2008-ம் ஆண்டு மே மாதம் அவர் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த அந்த பதவிக்கு ஏடிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் 2008-ம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.  செப்டம்பர் 2009-ல் அனூப் ஜெய்ஸ்வால் உளவுப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டார். இதையடுத்து அந்த பதவி காலியாகவே இருந்து வருகிறது. அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறும் உளவுப் பிரிவில் பணிகளை ஒருங்கிணைத்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரம் உள்ள பதவி காலியாக வைக்கப்பட்டிருப்பதை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.  தமிழகத்தில் சட்ட மேலவை, மற்றும் பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற வேண்டியிருப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவு ஏடிஜிபி பதவியை அரசு விரைவில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சனி, 25 செப்டம்பர், 2010

ஓசோன் குழும விவகாரம்: சி.எம்.டி.ஏ. மீதான புகாரை விசாரிக்க உத்தரவு!

சென்னை கோயம்பேடு சந்திப்பில் ஓசோன் குழுமத்தின் குடியிருப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர், செயலர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ்-பாட்டரீஸ் நிறுவனத்திடம் இருந்து 42 ஏக்கர் நிலத்தை ஓசோன் நிறுவனம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை உருவாக்கியது.
இந்த 42 ஏக்கர் நிலத்தில் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலமும் சேர்த்து விற்கப்பட்டதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோயில் நிலத்தை ஓசோன் குழுமத்தினர் தங்களது கட்டுமான திட்டத்துக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
  வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ள ஓசோன் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பான சர்ச்சை குறித்து தினமணியில் 2009 ஜூலை 14, 2010 ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது.
இரண்டுமுறையும் இதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பிரச்னை எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த சி.எம்.டி.ஏ. தலைவரும் செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி, ஓசோன் நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் எவ்வித
விதிமீறலும் நடைபெறவில்லை என்றும், திருமங்கலீஸ்வரர் கோயில் நிலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
4.76 ஏக்கர் நிலம் அபகரிப்பு விவகாரம்: இந்த திட்டப் பகுதியில் அடங்கியுள்ள சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர் என மொத்தம் 4.76 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
இங்குள்ள மொத்த நிலத்துக்கும் 1914-ம் ஆண்டில் அமாவாசை, ஆளவட்டான் ஆகிய இருவரும் பூர்வீக உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து வெவ்வேறு பெயர்களுக்கு நிலத்தின் உரிமை மாறியது.
அதன் பின்னர் இதன் ஒரு பகுதி நிலம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்களின் முந்தைய தலைமுறையினர் வசம் வந்தது.
இதே சமயத்தில் இவர்களுக்கு போக மீதியுள்ள நிலத்தில் (சர்வே எண்: 2307ஏ-ல் 3 ஏக்கர், சர்வே எண்: 2291ஏ-ல் 1.76 ஏக்கர்) 4.76 ஏக்கர் நிலம் பூர்வீக உரிமையாளர்களான அமாவாசை, ஆளவட்டான் ஆகியோரின் வாரிசுகள் 21 பேருக்குச் சொந்தமாக இருந்தது.  இவர்கள் அனைவரும் நிலத்தின் உரிமையை தங்களது உறவினரான இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கருக்கு அளித்தனர். உடல் நல பாதிப்பு காரணமாக அவர் இறந்ததை அடுத்து, அவரது மகன் பார்த்தி பாஸ்கர் (எ) பாலகிருஷ்ணனுக்கு நிலத்தின் உரிமை 1996-ல் அளிக்கப்பட்டது.
இந்தப் பொது அதிகார ஆவணத்தைப் பயன்படுத்தி நிலத்துக்குப் பட்டா பெறுவதற்காக சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரை 1996-ல் பார்த்தி பாஸ்கர் அணுகினார். பிறகு இயக்குநரின் அறிவுறுத்தலின்படி கோயம்பேடு பகுதிகளுக்கான உதவி செட்டில்மென்ட் அதிகாரியை பார்த்தி பாஸ்கர் அணுகினார்.
ஆனால், தாமதம் மற்றும் வாரிசுகளின் அடையாளம் குறித்து எழுந்த கேள்விகள் அடிப்படையில் பட்டா வழங்க அவர் மறுத்துவிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செட்டில்மென்ட் அதிகாரியும் பட்டா வழங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து பார்த்தி பாஸ்கர் தரப்பினர் சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநரிடமே முறையிட்டனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இயக்குநர், மனுதாரர் பார்த்தி பாஸ்கர், ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் என இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த பின்னர், பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள எழும்பூர்- நுங்கம்பாக்கம் வட்டாட்சியருக்கு 1999 ஜூலை 5-ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை சீராய்வு செய்யுமாறு நில நிர்வாக ஆணையரிடம் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் நிறுவனத்தினர் மனுச் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநரின் உத்தரவில் சில நுணுக்கமான காரணங்களைச் சீராய்வு செய்ய 2001 மே 14-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, பார்த்தி பாஸ்கர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: 12613/2001) தொடர்ந்தனர். இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து பார்த்தி பாஸ்கர் தரப்பில் 2002-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் சி.எம்.டி.ஏ.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தில் கட்டுமான திட்டம் மேற்கொள்ள ஓசோன் குழுமத்துக்கு 2009-ல் அனுமதி அளிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்: இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அது குறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பார்த்தி பாஸ்கர் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 10-6-2009-ல் புகார் அளிக்கப்பட்டது.
இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததை அடுத்து, இது தொடர்பாக பார்த்தி பாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.டி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன் ஆகியோர் ஆஜராகினர்.
தீர்ப்பு விவரம்: இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சி.டி. செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி இறுதிகட்ட விசாரணைகளை முடித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
  ஓசோன் குழுமத்துக்கு திட்ட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள வேண்டும். திட்ட அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் புகார் குறித்து இந்த விசாரணையில் தெரிய வரும் தகவல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சி.டி. செல்வம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 22 செப்டம்பர், 2010

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சிபிஐ தொடர்ந்த வழக்குகள் முடக்கம்

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 38 அதிகாரிகள் மீதான வழக்குகளும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் வி.வி. சாய்ராம் பாபு 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.



சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலனாய்வு முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தற்போது தடைபட்டுள்ளது. 1988-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு சட்டப்படி மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் முன்னர், அந்த குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும். இதன்படி சாய்ராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூன் 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.



மண்டல பாஸ்போர்ட் அதிகாரி:



இதேபோல, சென்னை மண்டல பாஸ்போர்ட் துறை அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 2009 ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது அஞ்சல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



இவர் மீதான வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவரது நியமன அதிகாரம் கொண்ட வெளியுறவுத்துறை உயரதிகாரியின் அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 10-ம் தேதி கடிதம் அனுப்பினர்.



இந்தக் கடிதத்தின் மீது ஆய்வு செய்து உயரதிகாரிகள் அனுமதி அளிக்காததால் சுமதி ரவிச்சந்திரன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தடைபட்டுள்ளது.



இதனால் வழக்கு அடுத்த நிலைக்குச் செல்லாமல் புலனாய்வு முடிந்த நிலையிலேயே முடங்கியுள்ளது.



குடிபெயர்வோர் பாதுகாவல்



அதிகாரி:



வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு உரிய அனுமதி அளிப்பதற்காக சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவல் அலுவலகத்தின் அதிகாரியாக இருந்த சேகர், அதே அலுவலகத்தைச் சேர்ந்த அஸ்வினி குமார், லூர்து ஜெயசீலன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.



இவர்கள் மீதான வழக்கிலும் புலனாய்வு முடிந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கடிதம் அனுப்பினர்.



இதற்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் இந்த வழக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலேயே முடங்கியுள்ளது.



127 வழக்குகள் முடக்கம்:



இந்த மூன்று வழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 343 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி சிபிஐ அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதில் தமிழகத்தை சேர்ந்த 38 மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் முடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து வழக்கு விவரங்களையும் சிபிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



தீர்வு எப்போது?



மத்திய அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி வரும் கடிதங்கள் நீண்ட காலமாக அனுமதி அளிக்கப்படாமல் வைக்கப்படுவதால் சிபிஐ தொடரும் லஞ்ச ஊழல் வழக்குகளின் நிலை கேள்விக்குறியாகிறது. இத்தகைய கடிதங்களுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் இத்தகைய போக்கு காரணமாக, சிபிஐ அதிகாரிகளின் பணிகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக கருதப்பட வேண்டியுள்ளது என லஞ்ச ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ஏடிஜிபி பதவி உயர்வு தாற்காலிகமாக ஒத்திவைப்பு?

தமிழக காவல் துறையில் ஐஜி நிலையில் உள்ள 2 மூத்த அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவல் துறையில் ஏஎஸ்பிக்களாக பணியைத் தொடங்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்படியாக எஸ்.பி., டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என பதவி உயர்வு பெறுகின்றனர். 

தமிழக காவல் துறையில் 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியில் சேர்ந்தவர்களில் லத்திகா சரண், பாலச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர். 

இதில் வயது மூப்பு காரணமாக பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, 1976-ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாகச் சேர்ந்து பொருளாதார குற்றப் பிரிவில் ஏடிஜிபியாக இருந்த திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலகவதி பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஒரு ஏடிஜிபி பதவியிடம் காலியானது. இந்த நிலையில் 1978-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி அமித் வர்மா மாரடைப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

2 பேருக்கு ஏடிஜிபி வாய்ப்பு:

இதையடுத்து காலியாக உள்ள ஏடிஜிபி பதவியிடங்களின் எண்ணிக்கை 2 -ஆக அதிகரித்தது. காவல் துறை நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் தற்போது ஐஜிக்களாக உள்ளவர்களில் பதவி மற்றும் வயது மூப்பு அடிப்படையில் 2 அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.


டிஜிபி பதவியில் இருந்த ஒருவர் ஓய்வு பெற்றவுடன் ஏடிஜிபி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நிலையில் இருந்த திலகவதிக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதேபோல, 2 ஏடிஜிபி பதவியிடங்கள் காலியானதை அடுத்து ஐஜி நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளவர்களுக்கு ஏடிஜிபி பதவி வழங்க வேண்டும்.

இதன்படி, 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களான புறநகர் போலீஸ் கமிஷனராக உள்ள எஸ்.ஆர். ஜாங்கிட், சிறைத்துறை தலைவராக உள்ள ஜே.கே. திரிபாதி ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், இதற்கான வரிசைப்பட்டியல் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், பதவி உயர்வு விவகாரத்தில் எவ்வித இறுதி முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில் பதவி மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை மட்டும் உடனடியாக ஏடிஜிபிக்களாக ஆக்குவதைவிட, மேலும் சிலரைச் சேர்த்து 4 அல்லது 5 பேருக்கு ஏடிஜிபி பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பரிசீலிக்க குழு அமைப்பு:

இவ்வாறு கூடுதல் நபர்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றால் அதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத, பெரிய அளவில் ஊழல் புகாருக்கு ஆளாகாத அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இவ்வாறு குழு அமைக்கப்படும் நிலையில், 1985-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்கள் எஸ்.ஆர். ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, டாக்டர் சி.கே. காந்திராஜன், 1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஜிக்களில் தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள ஜாபர்சேட், சஞ்சீவ்குமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நிர்வாக நடைமுறைகளின்படி இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கைகள் ஜனவரியில் தான் மேற்கொள்ளப்படும் என்பதால் தற்போது காலியாக உள்ள 2 ஏடிஜிபி பதவிகளுக்காக ஐஜிக்களுக்கு பதவி உயர்வு ஜனவரியில்தான் அறிவிக்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

3 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாதவர்கள்... 

மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இதன்படி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும். எனவே முக்கிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிப்பது ஒரே சமயத்தில் மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சென்னை மாநகராட்சி: சொத்துக் கணக்கு தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 155 கவுன்சிலர்களில் 29 பேர் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

அரசு ஊழியர்களைப் போன்று மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.


பொது நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் மலிந்துவிடாமல் இருக்க இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்கான தேர்தலில் போட்டியிடும் போது இது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்பின்னர் ஆண்டு தோறும் தத்தமது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்வதாகவும், அதன் பின்னர் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களாகப் பதவி வகிப்பவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் தகவல்களை கோரியிருந்தார்.

அதற்கு மாநகராட்சி அளித்த பதில்: இதற்கு, பதில் அளித்து மாநகராட்சியின் மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் அண்மையில் அளித்த  விவரம்:

சென்னை மாநகராட்சியில் மன்ற உறுப்பினர்களாக 155 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பதவியில் உள்ள காலத்தில் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை இவர்கள் அளிக்க வேண்டும்.

ஆனால், இவர்களில் மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்தியபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்பட 126 பேர் மட்டுமே தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

29 பேர் தாக்கல் செய்யவில்லை:  சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 29 கவுன்சிலர்களின் வார்டு விவரம்:

பேசின்பாலம் மண்டலத்தில் 15, 18, 28 ஆகிய வார்டுகள். புளியந்தோப்பு மண்டலத்தில் 33, 34, 38, 44 ஆகிய வார்டுகள். கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் 66, 67, 74, 76 ஆகிய வார்டுகள். ஐஸ்ஹவுஸ் மண்டலத்தில் 81, 82, 83, 84, 85, 87, 90, 93, 96 ஆகிய வார்டுகள். நுங்கம்பாக்கம் மண்டலத்தில் 97, 105, 108 ஆகிய வார்டுகள்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 115, 125 ஆகிய வார்டுகள். சைதாப்பேட்டை மண்டலத்தில் 132, 135, 141 ஆகிய வார்டுகள். அடையார் மண்டலத்தில் 147-வது வார்டு ஆகியவற்றின் கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்றத்துறையின் பொதுத் தகவல் அலுவலர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிதடி தொடர்பாக 5 வழக்குகள் நிலுவை:

சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மன்றக் கூட்டங்களில் அடிதடி தகராறுகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

இருப்பினும், 2001 முதல் 2006-ம் ஆண்டு மாநகராட்சி மன்றத்தில் பிரதான கட்சிகள் கணிசமான பலத்துடன் இருந்தன. இதன்காரணமாக, மன்றக் கூட்டங்களில் பல்வேறு தகராறுகள் ஏற்பட்டன.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது, மாநகராட்சி சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பான நிகழ்வுகளின் போது மாநகராட்சி சார்பில் பெரியமேடு போலீஸில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் மீது புகார் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2002-ம் ஆண்டில் குற்றப் பதிவேட்டு எண்கள்: 136002, 136202 ஆகிய வழக்குகளும், 2004-ம் ஆண்டில் குற்றப் பதிவேடு எண்கள்: 43904, 44004 ஆகிய வழக்குகளும், 2006-ம் ஆண்டு குற்றப் பதிவேடு எண்: 51706 ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றில் சில வழக்குகளில் திமுக கவுன்சிலர்களும், சில வழக்குகளில் அதிமுக கவுன்சிலர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என மாநகராட்சி மன்றத்துறை பொதுத் தகவல் அலுவலர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி சென்னை புறநகரில் 19 இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அருகில் 100 மீட்டர் சுற்றளவு வரை புதிய கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 

ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. 

ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின. 

இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது. 

இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.ஏ. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.
 
சென்னையில்...

  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
சென்னை புறநகரில்...

 சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பல்லாவரத்தில்...

 பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்: வழிமுறை மாறுமா?

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபணை மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பு என்ன என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படாததே சர்ச்சைகள் எழுவதற்குக் காரணம் என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


புதிய தலைமைத் தகவல் ஆணையர் யார் என்பது குறித்து அரசிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காலை பதவியேற்றார்.

தொடரும் சர்ச்சைகள்...

தலைமைத் தகவல் ஆணையர் நியமனத்தில் சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர் தலைமைத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக உள்ள வஜாகத் ஹபிபுல்லாவை காஷ்மீர் மாநிலத் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அப்போது புதிய தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து முடிவு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மூத்த மத்திய அமைச்சர் ஒருவரைக் கொண்ட குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்றபின், தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை என்று கூறினார் அத்வானி.

இதனால் எவ்வித முடிவையும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்தார் பிரதமர். பின்னர் வஜாஹத் ஹபிபுல்லா மாற்றம் கைவிடப்பட்டதை அடுத்து இதற்கான முயற்சிகள் முடிவுக்கு வந்தன.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலத்தில் புதிய தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதல்வர் ரோசையா தலைமையில் ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.

புதிய தலைமைத் தகவல் ஆணையரை அரசு தரப்பில் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு சடங்கு போல கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வெளியேறினார். ஆனாலும், அரசு அறிவித்த நபரே அங்கு தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார்.

தமிழகத்தில்...

இதனைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்காத நிலையில் கே.எஸ். ஸ்ரீபதி புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைகள் எழுவது ஏன்?

முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவின் மூலமாகவே நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தக் குழுவில் முதல்வரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சரும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பதில் எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை.

ஆனால், இந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் நிலையில், மூன்றில் 2 பேர் (முதல்வர், அமைச்சர்) ஏற்றுக் கொண்டதால் பெரும்பான்மை கருத்து என்று கூறி நியமனம் நடைபெறுகிறது. அரசின் பொதுவான நடைமுறையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதுவே சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதா, இல்லையா என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 15-வது பிரிவில் தெளிவான விளக்கம் இல்லை என்பதால் மத்திய அரசு இது தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு திருத்தங்கள் செய்யாத நிலையில், நியமனம் தொடர்பான குழுவில் எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும். அரசின் முடிவே நடைமுறைக்கு வரும். இது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அமலாக்கத்தையே நாளடைவில் சிதைத்துவிடும் என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரசு மருத்துவமனை எப்போது?

  சென்னையில் இருந்து புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான

கிழக்குக் கடற்கரை சாலையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வழித்தடத்தில் விபத்து சிகிச்சைக்கு என முழுமையான அரசு மருத்துவமனை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டி சர்வதேச தரத்தில் விரைவு சாலை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (டி.என்.ஆர்.டி.சி.) மூலம் 1998-ல் தொடங்கின. முதல் கட்டமாக சென்னை முதல் புதுச்சேரியின் புறநகர் பகுதிகள் வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச தரத்தில் இருவழி சாலை அமைக்கும் பணிகள் 2001-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. சுங்க கட்டணம் வசூலிக்க அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் 2002 முதல் செயல்படத் தொடங்கின.

இந்தச் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ உதவி கோர நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகளும், விபத்துகளைத் தடுக்க மிக அதிக எண்ணிக்கையில் ஒளி பிரதிபலிப்பான்களும் அமைக்கப்பட்டன.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ்களும், தனியான போக்குவரத்து கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

விபத்துகள் அதிகரிப்பு: போக்குவரத்து தொடங்கப்பட்டு 10-வது ஆண்டைத் தொடும் நிலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. வாகனப் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட வெகுவாக அதிகரித்ததே இங்கு விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இரு வழிச்சாலையாக தொடங்கப்பட்ட இந்த சாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாததே விபத்துக்கு முக்கியக் காரணமாக வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸôர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.

இந்தச் சாலை அமைந்துள்ள பகுதியில் சென்னை முதல் புதுச்சேரி வரை விபத்து கால அவசர சிகிச்சை வசதியுடன் ஒரு அரசு மருத்துவமனை கூட இதுவரை தொடங்கப்படவில்லை.

அரசு மருத்துவமனை வரவில்லையே தவிர பிரபலமான தனியார் மருத்துவமனைகள் புதிது புதிதாகத் தொடங்கப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடுவது சாத்தியமல்ல.

மருத்துவமனை அமைக்கும் திட்டம்: விபத்து நேர்ந்தால் மட்டுமல்லாது இப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையையே சார்ந்து இருக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2001-ம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை புறநகர் அரசினர் மருத்துவமனை சிறிய அளவில் தொடங்கப்பட்டது. பகுதி நேர மருத்துவ சேவை அளிக்கும் நிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது.

படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக இம் மருத்துவமனையை தரம் உயர்த்த 2002-ல் தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை 2 பிரிவுகளாக ஒதுக்கீடு செய்தார்.

அப்போதைய அதிமுக அரசு அளித்த ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ரூ. 25 லட்சத்தில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் புறநகர் மருத்துவமனைக்கான புதிய வளாகம் அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டப்பட்டது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், விபத்துகால அவசர சிகிச்சை ஆகியவற்றுக்கான கூடுதல் அறைகள் தொடர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈஞ்சம்பாக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் அரசுக்கு நினைவூட்டி திட்டத்தை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.

பாதியில் நின்றது ஏன்? உள்ளாட்சி நிலையில் இருந்து வலியுறுத்தல்கள் தொடராத நிலையில் இங்கு முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கும் திட்டம் முன்னேற்றம் ஏதும் இன்றி பாதியில் நின்றுவிட்டது என்கிறார் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுவேல் கூறினார்.

இனியாவது இந்த மருத்துவமனையில் விபத்துகால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுடன் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னை பெருநகர் விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு

சென்னை பெருநகர் பகுதியின் எல்லை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னரே தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.




சென்னை புறநகரில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.



இந்த வளர்ச்சியின் காரணமாக புறநகரில் ஒரே மாதிரியான சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், புறநகரில் சில பகுதிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளாகவும், சில பகுதிகள் ஊரக உள்ளாட்சிகளாகவும் இருப்பதால் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.



புதிய மாநகராட்சிகள்: இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லைக்குள் வரும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்தது.



இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சி.எம்.டி.ஏ. துணை தலைவர் தலைமையில் உயர்நிலைக் குழு 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, 2008 ஏப்ரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது.



இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது மக்களின் கருத்தை அறிய தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் 2008-ல் சி.எம்.டி.ஏ.வால் நடத்தப்பட்டன. இக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இரண்டு விதமான செயற்குறிப்புகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.



2 பரிந்துரைகள்: சென்னை பெருநகர் எல்லைக்குள் சென்னை மாநகராட்சியின் எல்லையை 800 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்து சென்னை மாநகராட்சியை சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவித்தல் என்பது ஒரு செயற்குறிப்பு.



ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் நகராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சியின் பரப்பளவை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது. இதே சமயத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.



இதில் 2-வது செயற்குறிப்பை ஏற்ற தமிழக அரசு, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் எல்லைகளை 426 சதுர கி.மீ.-ஆக விரிவாக்கம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த டிசம்பர் 26-ம் தேதி பிறப்பித்தது.



மேலும், தாம்பரம், ஆவடி பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை அறிவிப்பதை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்தது.



பெருகி வரும் தேவை: இதே சமயத்தில், சென்னை பெருநகர் எல்லைக்கு வெளியே உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருவள்ளூர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.



இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு நகர்ப்புற அந்தஸ்து அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.



மேலும், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களின் எல்லைகளைக் காட்டிலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை மிகவும் குறைவாக உள்ளது.



அரசு முடிவு: இதனால், அதிகரித்துவரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மற்ற பெருநகரங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், இப்போது 1,189 சதுர கி.மீ.-ஆக உள்ள சென்னை பெருநகர் பகுதியை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்வது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



எனவே, ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், சிங்கபெருமாள் கோயில், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வரை சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யும் போது எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை அளிக்குமாறு சி.எம்.டி.ஏ.வுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.



பணிகள் தீவிரம்: இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பகுதிகளை சென்னை பெருநகர் எல்லைக்குள் சேர்ப்பது என்பது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.



அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளை தலைமையிடங்களாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ள புதிய மாநகராட்சிகளின் உத்தேச எல்லைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கத்துக்கு பிறகே புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சென்னைமேல்முறையீட்டு மனுவை வாங்காதது ஏன்? மாநிலத் தகவல் ஆணையர் கேள்வி

சென்னை, ஆக. 4: சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தகவல் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாங்க மறுத்த அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து ஒரு மாதத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநிலத் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் உத்தரவிட்டார்.






சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட 5 பிரிவுகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம், படாளம் பகுதியை சேர்ந்த பி. கல்யாணசுந்தரம் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மனு செய்தார்.






இந்த மனுவில் கோரப்பட்டதில் சில தகவல்களை மட்டும் பொது தகவல்களை பொது தகவல் அதிகாரி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அளித்தார். ஆனால், இந்தத் தகவல்கள் முழுமையாக இல்லை என்றுக்கூறி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(1) பிரிவின்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 4-ம் தேதி கல்யாணசுந்தரம் அனுப்பினார். ஆனால், இந்த மனுவை வாங்க முடியாது என்றுகூறி மாநகராட்சியின் மேல்முறையீட்டு அதிகாரி திருப்பி அனுப்பிவிட்டார்.






இதையடுத்து கல்யாணசுந்தரம், மாநிலத் தகவல் ஆணையத்தில் இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 19(3)-ன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு செய்தார். இந்த இரண்டாவது மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி, தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.






அப்போது மனுதாரர் ஆஜரானார். ஆனால், மாநகராட்சி சார்பில் பொது தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டு அதிகாரியும் ஆஜராகவில்லை. பொது தகவல் அதிகாரி ஆஜராகாத நிலையில் மனுதாரரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று மனுதாரர் கூறியது பதிவு செய்யப்பட்டது.






தகவல் ஆணையர் உத்தரவு: விசாரணையின் முடிவில் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், கடந்த 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த ஆணை பெறப்பட்ட இரு வாரங்களுக்குள் விடுபட்ட தகவல்களை முழுமையாக அளித்து மனுதாரரின் ஒப்புகை பெற்று அதன் விவரத்தை ஆணையத்துக்கு பொது தகவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.






தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை வாங்க மறுத்த மேல்முறையீட்டு அதிகாரி மீது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விதி எண் 20(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை மாநகராட்சி ஆணையர் தனது குறிப்புரையுடன் ஒரு மாதத்துக்குள் தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.






இவ்வாறு உரிய காலத்துக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், இந்த விவகாரத்தில் தகவல் ஆணையம் உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 29-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியும் விசாரணைக்கு வராத பொது தகவல் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் தனது குறிப்புரையுடன் மாநகராட்சி ஆணையர், தகவல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அலட்சியத்தால்

வெள்ளி, 30 ஜூலை, 2010

தனியார் குடியிருப்புகளாக மாறும் அரசு ஒதுக்கீட்டு மனைகள்

  அரசு ஒதுக்கீட்டின்கீழ் பெற்ற மனைகளில் தனியார் குடியிருப்புகள் கட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது விதிகளுக்கு மாறானது இல்லை என தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



தனியார் குடியிருப்புகளாகும் அரசு ஒதுக்கீட்டு மனைகள் என்ற தலைப்பில் தினமணியில் திங்கள்கிழமை வெளியான செய்தி தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அளித்துள்ள விளக்கம்:


வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்ற மனையையோ அல்லது வீட்டையோ, ஒதுக்கீடு பெற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பதானால் வீட்டுவசதி வாரியத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், வீட்டுவசதி வாரிய விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது.÷இந்த விதிமுறை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், 2003-ம் ஆண்டு அடியோடு நீக்கப்பட்டுவிட்டது.


முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எச்.பி.என். ஷெட்டியின் மகன் தீபக் என பலரும் அந்தந்த மனைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.


இதேபோன்று சைதை துரைசாமி தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய மனையை மேம்படுத்தி வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.


இவர்களை போலவே, அரசு விருப்ப ஒதுக்கீட்டு முறையில் மனைகள் ஒதுக்கீடு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அவ்வாறு ஒதுக்கீடு பெற்ற மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ, வர்த்தக வளாகங்களாகவோ மேம்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இதில் வீட்டுவசதி வாரியத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை.


சென்னை அண்ணா நகரை சேர்ந்த பர்வின் ஜாபர், நந்தம்பாக்கத்தை சேர்ந்த துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூர் காமராஜர் நகர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் அப்போதைய சந்தை விலைக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.


ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த மனைகளுக்குரிய தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தி சொந்தமாக்கிக் கொண்டு விற்பனைப் பத்திரங்களையும் பெற்றுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து அந்தந்த மனைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக அவர்கள் மேம்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த மாதிரி செய்வது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதால், இது எந்த வகையிலும் வீட்டுவசதி வாரியத்தின் விதிகளுக்கு முரண்பாடானது இல்லை என வீட்டுவசதி வாரியம் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.