திங்கள், 16 ஜூன், 2008

காயத்திற்கு மருந்து கருணை!

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையுமே சுமையாகக் கருதும் அளவுக்கு தனி மனித மனோபாவங்கள் மாறியுள்ளது. இதில் விபத்துகளில் காயமடைந்த மற்றும் நோயுற்ற பிராணிகளின் நிலை குறித்து யாராவது கவலைப்படுவார்களா?


இந்தக் கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல் நமக்குப் பாடமாகவும் இருக்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (மாலை நேரப் பிரிவு) ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் பிந்து.


காயமடைந்த, நோயுற்ற நாய்களை எங்கு பார்த்தாலும் அவற்றைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து, மிகுந்த பொறுப்புடன் மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார் பிந்து. நாயைப் பார்த்தவுடன் கல்லை எடுத்து அடிக்க நினைப்பவர்கள் மத்தியில் இவர் பார்வை மட்டும் இப்படி மாறியது எப்படி? அவரே சொல்கிறார்:

""சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பிரதான சாலையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்து நடந்தது. வேகமாகச் சென்ற வாகனத்தில் சிக்கிய ஒரு நாய் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநர் உள்பட அவ்வழியே சென்ற எல்லோரும் இந்தச் சம்பவத்தை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் தங்களது சொந்த வேலை நிமித்தமாகச் சென்றுகொண்டிருந்தனர். இந்த விபத்தும், மக்களின் போக்கும் நாயின் உடலை மட்டுமல்ல எனது மனதையும் காயப்படுத்துவதாக அமைந்தது.

உடனடியாக அந்த நாயை அங்கிருந்து எனது வீட்டுக்கு கொண்டு சென்று, முதல் உதவி அளித்தேன். எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் நாயை "ப்ளு கிராஸ்' அமைப்பினரிடம் ஒப்படைத்தேன். இதன்பிறகுதான் நோயுற்ற நாய்களின் பக்கம் என் கவனம் திரும்பியது.


இதைப்போல் விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி அருகே இன்னொரு விபத்தைப் பார்த்தேன். பஸ் சக்கரம் ஏறி காலில் பலத்த காயமடைந்து கதறுகிறார் ஒரு வாலிபர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் சக மனித உயிர் ஒன்று அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தவிப்பதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அடுத்த வண்டியைப் பிடித்து அவரவர் போகவேண்டிய இடங்களுக்குச் சென்றனர்.

அந்த விபத்தை நேரில் பார்த்த நான் உடனடியாக அருகில் இருந்த தெரிந்தவர் ஒருவரின் காரைக் கேட்டுப் பெற்று காயமடைந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.

இதோடு நிற்காமல் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து சாட்சியம் அளித்ததன் பயனாக அந்த வாலிபரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைத்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் பாதிக்கப்படும் சக உயிர்கள் மீதான பரிவை எனக்குள் பலப்படுத்தியது. அடுத்த சில சம்பவங்களில் நான் நம்பிய தன்னார்வ அமைப்பின் செயல்பாடுகளும் திருப்தி தராததால், பாதிக்கப்படும் நாய்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கத் தொடங்கினேன். 18 வருடங்களாக இந்தப் பணி தொடர்கிறது.


பி.எச்.இ.எல். நிறுவனத்தில் உயரதிகாரியாக இருந்த தந்தை பிஷ்ராடே 2005-ல் உயிரிழந்தார். இதையடுத்து, பணி நிமித்தமாக உடன் பிறந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அவர்களுடன் தாயும் சென்றுவிட பாதிக்கப்பட்ட நாய்களுடன் நான் முழுமையாக ஐக்கியமாகிவிட்டேன்.


நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை வெறுப்புடன் பார்க்கும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். எது எதற்கோ மேற்கத்திய நாடுகளின் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் நாம் விலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது ஏன்?


விலங்குகளுக்காக நீங்கள் எதையும் பிரத்யேகமாகச் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் மிச்சம்மீதியாக இருக்கும் உணவுப் பண்டங்களை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசாமல் அதனை ஒரு காகிதத்திலோ அல்லது ஒரு துண்டு இலையிலோ போட்டு முறையாக வைத்தாலே போதும்.

நீங்கள் அதன் பசியை, அதன் தேவையை உணர்ந்துள்ளீர்கள் என்று அது உங்களை நம்பி இருக்கத் தொடங்கிவிடும். சில மனிதர்களைப் போன்று நாய்களுக்குப் பொய் சொல்லி உதவிகளைப் பெற்று ஏமாற்றத் தெரியாது. எனவே, உதவ வேண்டும் என்று நினைத்தால் நாய்களை நம்பி உதவலாம்.


அடிபட்ட, நோயுற்ற நாய்களை அருவருப்புடன் பார்த்து வெறுக்காமல் நம்மால் முடிந்த அளவில் சிறிய உதவிகளைச் செய்தாலே போதும் பல பெரிய பிரச்னைகள் தீர்ந்துவிடும். உதாரணமாக, புதிதாக யாரையாவது பார்த்தால் குரைப்பது நாய்களின் இயல்பான குணம்.

இதனைத் தவறாக புரிந்துக் கொள்ளும் சிலர் கையில் கிடைக்கும் கல்லால் அதனைத் தாக்குகின்றனர். இவ்வாறு தாக்கப்படுவதால் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டால் சிறு புழுக்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நாய்களின் உடலில் காயம் ஏற்பட்ட பகுதியில் மஞ்சள் தூள் அல்லது டர்பைன்டைனைக் கொட்டினாலே போதும் காயம் ஆறத் தொடங்கிவிடும். இதைவிடுத்து புழு வைத்துவிட்டது என்று கூறி நாயை மேலும் அடித்து துன்புறுத்துவது மற்றும் விரட்டி அடிப்பதால் அதனிடம் வெறி உணர்வை வளர்த்துவிடும். இது நமக்கே பாதகமாக முடியும்.


பொதுவாக நாய்கள் இனப்பெருக்கத்துக்கு எதிர்பாலினத்தைத் தேடும் போது ஒருவித ஒலியை எழுப்பும். இதனை நம்மில் பலரும் அது அழுவதாகவும் அவ்வாறு நாய் அழுவது அருகில் இருக்கும் வீட்டில் யாராவது இறக்கப்போவதற்கு முன்னெச்சரிக்கை என நினைப்பது தவறு. இவ்வாறு கூறப்படுவதும் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை.

மனிதர்களுக்கு ஏற்படுவது போன்று நாய்களின் உடலில் ஏற்படும் தோல் பாதிப்பே சொறியாகும். உரிய மருந்துகள் அளித்தால் இந்தச் சொறியைக் குணப்படுத்திவிட முடியும்.

ஆனால், பலரும் தாங்கள் பாசத்துடன் வளர்க்கும் நாயானாலும், அதற்கு இத்தகைய தோல் பாதிப்பு ஏற்பட்டவுடனே வீட்டை விட்டு வெளியே விரட்டிவிடுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் நாய்கள் மற்றவர்களால் அருவருப்புடன் பார்க்கப்பட்டு மேலும் துன்புறுத்தப்படுகின்றன.

இத்தகைய சொறி பாதிப்பை ரேபிஸ் என நம்பியும் சிலர் இவற்றைக் கொல்லும் அளவுக்குச் செல்கின்றனர். சொறியால் பாதிக்கப்பட்ட பல நாய்கள் மீட்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவை தற்போது நன்றாக இருக்கின்றன.

சொறி வேறு ரேபிஸ் வேறு என்ற அளவுக்கு கூட நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்த வகையான தகவல்களை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். விலங்குகளில் குறிப்பாக வேறு எதற்கும் இல்லாத வகையில் நாய்களுக்கு ஒரு சிறப்பு குணம் உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மனிதர்களின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் என மருத்துவர்களே உறுதிபடுத்தியுள்ளனர். இவ்வாறு அடுத்த ஒரு உயிரின் நலனுக்காக யோசிக்கும் போது மனிதனின் மன நிலை மேம்பட்ட நிலையை எட்டுகிறது.


ராஜபாளையம் உள்ளிட்ட நமது நாட்டு பாரம்பரிய வகை நாய்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கல்லூரி பணி மூலம் கிடைக்கும் வருவாயை வீட்டு வாடகைக்கும், நாய்களைப் பராமரிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தி வருகிறேன்.

குணப்படுத்தப்பட்ட நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நாய்களைப் பெற்று பராமரிக்க யாராவது முன்வந்தால் கொடுத்துவிடுகிறேன். புற்று நோய், பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட எட்டு நாய்கள் தற்போது எனது அரவணைப்பில் உள்ளது'' என்றார் பிந்து.

இந்தத் தாய் வழியில் நடைபோடப் போகிறவர் யாரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக