சனி, 22 ஆகஸ்ட், 2009

"முன்னுரிமைச் சான்றிதழ்' மோசடி! - விழிபிதுங்கும் வேலைவாய்ப்புத் துறை!

அரசுத் திட்டங்களுக்கு நிலம் அளித்ததாகக் கூறி வேலைவாய்ப்புக்கான "முன்னுரிமைச் சான்றிதழ்' வழங்கியதில் மோசடி நடந்திருப்பது குறித்த விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்னுரிமைச் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளின் காரணமாக தங்களது வாழ்வாதாரமாக உள்ள முழு நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சான்றிதழ் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் மூலம் அளிக்கப்படுகிறது.

இப்படி முன்னுரிமைச் சான்றிதழ் பெறக் குறைந்தது 2 ஏக்கரும், அதற்கு அதிகமாகவும் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.

இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி அந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவரவர் கல்வித் தகுதி அடிப்படையில் பதிவு செய்யும் போது பொது பட்டியலில் உள்ளவர்களைவிட இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தகைய ஒரு சலுகை இருப்பதே தெரியாமல் ஏராளமானோர் அரசுக்கு நிலம் அளித்துவிட்டு நகர்ப்புறப் பகுதிகளுக்கு கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்தி பணம் பார்க்க நினைக்கும் சிலர், அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து பத்து சென்ட், இருபது சென்ட் என்று பெயருக்கு குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.

பின்னர் நிலங்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு உரிய இழப்பீட்டையும், நிலம் வழங்கியதாகக் கூறி வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இதுபோல சான்றிதழ்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நபர்கள் அரசு பணி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த மோசடியால் நிலம் வழங்கி அரசின் சலுகையை பெறவேண்டிய விவசாயிகளின் குடும்பத்தினரும், உரிய கல்வித் தகுதியுடன் பல ஆண்டுகளாக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

நாமக்கல்லில்...: நாமக்கல்லில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற திடீர் சோதனையில் தரகர் முருகேசன் என்பவர் சிக்கினார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் முன்னுரிமைச் சான்றிதழ் மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ் பெற்றுள்ளது உறுதியானது. மேலும் இதில் 25 பேர் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வட்டாட்சியர், 2 வருவாய் ஆய்வாளர்கள், 12 கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வருவாய்த் துறை, வேலை வாய்ப்புத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் இந்த மோசடி அரங்கேறி வருவது விசாரணையில் நாமக்கல் சம்பவம் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும்...: நாமக்கல் மட்டுமல்லாமல் திருச்சியிலும் இது போன்று மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

"அரசுத் திட்டங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வரை அளிப்பவர்களுக்கே இந்த முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், 10 சென்ட் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் அளித்தவர்களுக்கும் மோசடியாக முன்னுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன' என ஊழல் ஒழிப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் "திருச்சி' வேங்கை தெரிவித்தார்.

ஏதோ ஒரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வாக இதனை கருதாமல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த மோசடி குறித்து வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்ட அனைத்து முன்னுரிமைச் சான்றிதழ்களையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க உத்தரவிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனூர் கந்தசாமி கோயில் குடமுழுக்கு நடப்பதில் சிக்கல்?

திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள ஆனூர் முருகன் கோயில் பராமரிப்புப் பணியில் உபயதாரர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் இடையிலான பிரச்னை காரணமாக குடமுழுக்கு விழா திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


செங்கல்பட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொன்விளைந்த களத்தூர் அருகில் உள்ளது ஆனூர் கிராமம். இங்கு செüந்தரவல்லி உடனுறை அஷ்டபுரீஸ்வரர் கோயில், வேதநாராயணப் பெருமாள் கோயில், கந்தசாமி கோயில் ஆகியவை உள்ளன.


பல்லவர் காலம், முதலாம் பராந்தகன், முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் இந்த கோயில்களில் உள்ளன.


தொல்லியல் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த, இந்த கிராமத்தில் உள்ள பழமையான கந்தசாமி கோயில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது.


இந்த கிராமத்தில் பிறந்து பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியவர்கள் பலர் மேற்கொண்ட முயற்சியால் ஆனூர், "ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை' 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கை அடிப்படையில் இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.


இதன்படி பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் கோயிலின் கருவறை, மகா மண்டபம், மூன்று நிலை ராஜகோபுரம், விநாயகர் சன்னதி, தரைகளில் கற்கள் பதித்தல், சுற்றுவர் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதில் பெரும்பாலாண பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் செப்டம்பர் 4-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்த கிராம மக்களும், அறக்கட்டளையினரும் முடிவு செய்தனர். விழாவுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலரிடம் ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளையினர் அணுகினர்.


இந்த நிலையில், கோயில் திருப்பணி குறித்த விளம்பரம் மற்றும் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் நன்கொடை பெறுவது குறித்து இடம் பெற்றிருந்த தகவல்கள் தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


செயல் அலுவலர் பதில்:

""நன்கொடை பெறுவது குறித்து நாளிதழ் விளம்பரத்திலும், விழா அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது நிர்வாக நடைமுறையே தவிர குடமுழுக்கு விழாவை தடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை'' என இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.


அனுமதி கிடைக்கவில்லை:

எனினும், இதுவரை குடமுழுக்கு விழாவுக்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை அளிக்காததால், விழா நடைபெறுமா என கிராம மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.


இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு கெüரவப் பிரச்னையாக மாறி நூறாண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள கந்தசாமி கோயில் குடமுழுக்கு விழாவை தடுத்துவிடாமல் அரசு உரிய நடவடிக்கை என்கின்றனர் ஆனூர் கிராம மக்கள்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

"அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் யார்? குழப்பத்தில் வீட்டுவசதி வாரியம்

அரசின் விருப்ப உரிமை அடிப்படையில், "அப்பழுக்கற்ற' அரசு ஊழியர் என்ற பிரிவில் வீடு, மனைகளை ஒதுக்கீடு செய்வதில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கும் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளில் 10 சதவீதம் அரசின் விருப்ப உரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.


இதில் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற பிரிவில் சாதனை படைத்தவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என 2003-ல் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியல் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்று கூறி அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


திருமணமாகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கூறப்பட்ட காரணம் கேள்விக்குறியாகியுள்ளது.


அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்ற பிரிவின் கீழ் வீடு, மனை பெற்றவர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதும் சிலர் தண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று தமிழக அரசு முகப்பேர் ஏரித் திட்டத்தில் மனை ஒதுக்கீடு செய்த (அரசாணை எண்: 216. 13-3-2008) சுமதி ரவிச்சந்திரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சில மாதங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.


யார் சான்றளித்தது?

சுமதி ரவிச்சந்திரன் எப்போது, யாரால் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என சான்றளிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, தங்கள் துறையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என யாரையும் சான்றளிக்கவில்லை என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், பாஸ்போர்ட் வழங்கல் பிரிவு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் மேற்கூறிய பதில்களை (கடித எண்: எம்ஏஎஸ்.ஆர்டிஐ.206.09. 13-07-09) அளித்துள்ளனர்.


இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் சுமதி ரவிச்சந்திரன் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று கண்டறியப்பட்டு அரசின் விருப்ப உரிமை ஒதுக்கீட்டில் மனை ஒதுக்கீடு பெற்றார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


இவர் மட்டுமல்ல அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் பலரும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களாக வீடு, மனை ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.


தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீட்டுவசதி வாரியத்தின் முகப்பேர் கோட்ட அலுவலகத்தில், "பேக்ட்' அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அண்மையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்றுக் கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உரிய ஆவணங்கள் இல்லாதது இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது.



மத்திய அரசிலும், தமிழக அரசிலும் எந்தத் துறையிலும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என அறிவிக்கப்படுவது, சான்றளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


குழப்பத்தில் அதிகாரிகள்:

""அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேலிடத்தில் இருந்து வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்'' என வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் யார்? என்பது குறித்த உரிய வரைமுறைகள் இல்லாததால் மனை ஒதுக்கீட்டு பிரிவு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

நாட்டிலேயே முதல் முறையாக மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் ஆய்வு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் விளைவாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் 3 பேர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மாநில தகவல் ஆணையத்தை பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆய்வு செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை 2005-ம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகள் குறித்த விவரங்களை எழுத்துமூலமாக கேட்டறிய மக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது.


இந்த சட்டத்தின்படி தகவலை கேட்டு பெறுவது மட்டுமல்லாது அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முக்கிய கோப்புகள், ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் பெறுவதுடன் அல்லாமல் தங்களுக்குத் தேவைப்படும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெறுவதற்கும் மக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சில அரசு அலுவலகங்களில் மட்டுமே அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோப்புகளை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.


சமூக ஆர்வலர்கள்:

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நா. மதியழகன், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ரமேஷ் ஆகியோர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமலாக்கும் அதிகார அமைப்பான தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அலுவலகத்தை ஆய்வு செய்ய மனு செய்திருந்தனர்.

முதலில் தயங்கி தாமதம் செய்த தகவல் ஆணையம் இவர்களின் பகீரத முயற்சிக்குப் பின் அண்மையில் இதற்கான அனுமதியை அளித்தது. இதன்படி, ஆகஸ்ட் 10, 11 ஆகிய நாள்களில் இவர்கள் இருவரும் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் உறுப்பினர் கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து மாநில தகவல் ஆணையத்தை ஆய்வு செய்தனர்.


""ஆய்வுக்கு அனுமதி அளித்ததுடன், ஆய்வு செய்தமைக்கான சான்றிதழையும் மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் தங்களுக்கு வழங்கினர்'' என்றார் வழக்கறிஞர் ரமேஷ்.


""இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து அரசு அலுவலகங்களையும் பொது மக்கள் நேரடியாக ஆய்வு செய்து அங்கு நடைபெறும் நிர்வாக நடைமுறை விவரங்களை தெரிந்து கொள்ள வழிகாட்டும் விதமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.

தகவல் தர மறுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட பொது தகவல் அதிகாரிகள் பட்டியல், அவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்த ஆய்வில் தெரிய வந்தது என்றார் மதியழகன்.


14 பதவிகள் காலி:

ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரது பணி விவரங்கள், அதிகாரங்கள், செயல்பாடுகள், ஊதியங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
மாநில தகவல் ஆணையர் பதவி உள்பட மொத்தம் 14 பதவியிடங்கள் ஆணையத்தில் காலியாக இருப்பது தங்களது ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.



""தகவல் பெறும் உரிமைச் சட்ட அமலாக்கத்தை மேலும் விரைவுப்படுத்துவதில் இந்த ஆய்வு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது'' என்றார் ஆய்வின் போது உடன் இருந்த கல்யாணசுந்தரம்.

சனி, 8 ஆகஸ்ட், 2009

சென்னை மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் புகார்

சென்னை புரசைவாக்கம் - பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய பதில் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மீது ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தேசிய ஆணையத்தின் தமிழக இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


சென்னை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பி. கல்யாணசுந்தரம் (67). லஞ்சம் கொடாதோர் இயக்க உறுப்பினரான இவர் தனது பேரன் கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதிச் சான்றிதழ் கோரி புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6-3-2008-ல் விண்ணப்பித்தார்.


தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கல்யாணசுந்தரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். ஆனால், இதற்கும் வட்டாட்சியர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.


இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை ஆணையர், செயலர், முதல்வர் என அனைத்து தரப்பிலும் கல்யாணசுந்தரம் முறையிட்டார்.


இந்த முறையீடுகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன், புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியருக்கு பல முறை கடிதம் அனுப்பினார்.


இதன் பின்பும் சம்பந்தப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து மனுதாரரையும், வட்டாட்சியரையும் மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் விசாரணைக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி அழைத்திருந்தார்.


இந்த விசாரணையில் ஆஜரான மனுதாரர், ""புரசைவாக்கம்- பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்போர் அங்குள்ள அதிகாரிகளால் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்'' என்றும் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.


ஆனால், இந்த விசாரணையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரோ, அவரது தரப்பினரோ ஆஜராகவில்லை.
இந்த நிலையில், மனுதாரர் கல்யாணசுந்தரம் இது குறித்து ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் (என்.சி.எஸ்.சி.) முறையிட்டார்.



இதன் அடிப்படையில் கல்யாணசுந்தரத்தின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு என்.சி.எஸ்.சி.யின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன் கடிதம் எழுதினார்.


ஜூன் மாதம் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியராக வி. ஷோபனா பொறுப்பேற்றது முதல் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக பிரிவு இயக்குநர் இ. தசரதன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி கடிதம் (எண்: 2/15/2008 ரெப்.) அனுப்பினார்.


""கே.எல். கெüதம் விக்னேஷுக்கு சாதி சான்றிதழ் கோரும் மனு தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எவ்விதப் பதிலோ அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையோ வரவில்லை.


கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இந்த பிரச்னையில் ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் உரிமையியல் நீதித்துறை அதிகாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இ. தசரதன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பதில்:


இந்த பிரச்னை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வி. ஷோபனா கூறியது:
""இப் பிரச்னை தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனினும், இதில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்'' என்றார்.

அதிகரிக்கும் சுற்றுச்சுவர் விதி மீறல்கள்!

சென்னையில் குடியிருப்பு வளாகங்களில் சுற்றுச் சுவர் உயரம் தொடர்பான விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விதி மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.


எதிர்வீட்டு சுற்றுச்சுவரின் உயரம் உங்கள் வீட்டு வெப்ப நிலையைப் பாதிக்கும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரிய விஷயமாக தெரியாது.

ஆனால், கே.கே. நகர் பொப்பிலி ராஜா 91, 92 ஆகிய தெருக்களைச் சேர்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது.


இங்குள்ள ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச் சுவரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வலை வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது கம்பி வேலி அகற்றப்பட்டு இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

5 அடி உயரச் சுவர் மீது, 2 அடி உயரத்துக்கு இரும்புத் தட்டி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இத்தகைய இரும்புத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.


உச்சி வெயில் நேரத்தில் வெப்பக் கதிர்கள் தட்டிகள் மீது பட்டு பிரதிபலிப்பதால் சுற்றுப்புறத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது.


பெரிய சமதள பரப்பின் குறுக்கே சராசரிக்கும் அதிக உயரத்தில் இருக்கும் இந்தத் தட்டிகள் காற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று "எக்ஸ்னோரா' உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுவும் விதி மீறலே...:

தனி வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் 2 மீட்டர் உயரம் வரை மட்டுமே சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் (டி.சி.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள வளாகங்கள் தவிர வேறு வளாகங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் அனுமதியின்றி செயற்கையான இரும்புத் தட்டிகள் அமைப்பது விதிமீறல்தான் என்கின்றனர் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் பராந்தகச் சோழன் சிலை அமைப்பதில் சர்ச்சை


சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் முதலாம் பராந்தகச் சோழனின் சிலை அமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடபழனியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் எதிரில் நிலம் ஒதுக்கப்பட்டு புதிய வளாகம் ரூ. 2.17 கோடியில் கட்டப்பட்டது.



இந்தப் புதிய வளாகத்தைத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிதி அமைச்சர் க. அன்பழகன் கடந்த ஜூன் 19-ம் தேதி திறந்து வைத்தார்.



அதிமுக ஆட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் அமைக்க ஒதுக்கப்பட்ட இந்த இடம் திமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சொந்தக் கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்டது.



உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் இப்போதைய நடைமுறைக்கு முன்னோடியாக உள்ள குடவோலை முறை குறித்தச் செய்திகள் முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.



எனவே புதிய வளாக நுழைவாயிலில், முதலாம் பராந்தகச் சோழன் மற்றும் குடவோலை முறை குறித்த சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்விதம் சிலை அமைப்பதற்கு முன்னதாகவே புதிய வளாகத்துக்கான திறப்பு விழா நடைபெற்றது. இருப்பினும், புதிய வளாகத்தின் சுற்றுச்சுவரில் சிலை வைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசு ரூ. 6 லட்சத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது.



உருவ மாதிரி கிடைக்கவில்லை



இந்தச் சிலை வைப்பதற்காக முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரியைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேடினர். அரசு ஆவணக் காப்பகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதற்கான தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



ஆனால், முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரி எங்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜராஜ சோழன் உள்ளிட்ட சில சோழ மன்னர்களின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாம் பராந்தகச் சோழனின் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலரின் மூலம் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.



விலை அதிகம்



""மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அடிப்படையில், அங்கு வைக்கப்படுவதற்காக உருவாக்கப்படும் சிலைக்கு மொத்தச் செலவு அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டாது'' என இது போன்ற சிற்பங்களை உருவாக்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆனால், அரசு இதற்கு ஒதுக்கியுள்ள ரூ. 6 லட்சம் சிலைக்காக முழுமையாக செலவிடப்பட்டதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆணையருக்கும் சில உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக சிலர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஆணைய ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.



வரலாற்று ஆசிரியர்கள்



முதலாம் பராந்தகச் சோழன் கி.பி. 907-ம் ஆண்டு முதல் கி.பி. 953-ம் ஆண்டு வரை ஆட்சிப் புரிந்தார். களபிரரை முறியடித்து கி.பி. 575-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசை கி.பி. 915-ல் முறியடித்து மதுரையை வென்றவர் முதலாம் பராந்தகச் சோழன்.



உத்தரமேரூர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள குடவோலை முறையில் அதிகாரிகளே (வாரியத் தலைவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் இது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை அல்ல எனவும் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.



இது தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் 1904-05 ஆண்டு அறிக்கையில், (பக்கம் 136, 138) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.



இத்தகைய சூழலில், உருவ மாதிரி குறித்த உறுதியான ஆவணங்களின் அடிப்படை இல்லாமல் பராந்தகச் சோழன் என்று கூறி ஒரு சிலையை உருவாக்கி முக்கியமான ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் மக்களிடம் தவறான தகவல் பரவ வழிவகுத்துவிடக்கூடாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஜரிகை எரிப்புப் புகையால் தி. நகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு: மாசுகட்டுப்பாடு வாரியம் பாராமுகம் ஏன்?

சென்னை தியாகராய நகரில் ஜரிகைகளை எரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் புகையால் துரைசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.


தியாகராய நகரில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவற்றில் பழைய பட்டுச் சேலைகளை வாங்கிக் கொண்டு புதிய சேலைகளை தள்ளுபடி விலையில் அளிக்கும் திட்டம் உள்ளது.


இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பழைய பட்டுச் சேலைகளில் இருக்கும் ஜரிகைகளை வாங்கி அவற்றை எரித்து, இதில் இருந்து செம்பு, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் பணியை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.


இத்தகைய பணிகளை செய்வது தொழில் ரீதியான செயல்பாடு. இவை தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் மட்டும் நடைபெறவேண்டும். அதுவும் மாசுக்கட்டுப்பாடு வாரித்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும்.


ஆனால், தியாகராய நகரில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் வணிகப் பகுதிகளுக்கு அருகில் சிலர் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஜரிகை எரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


இதனால், துர்நாற்றத்துடன் வெளியாகும் புகையால் அருகில் உள்ள வணிகப் பகுதிகளில் வந்து செல்வோரும், அங்கு பணி புரிவோரும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக துரைசாமி சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஜரிகை எரிப்புப் பணியால் வெளியாகும் புகையால் இந்த சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் பகல் நேரங்களில் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


இவ்வாறு வெளியாகும் புகையால் இப் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வந்து செல்வோரும், பணி புரிவோருக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய சூழல் நிலவுவதாக இங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றின் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களின் கோரிக்கை.

ரூ. 1.6 கோடியில் பொலிவு பெறுகிறது கீழ்க்கட்டளை ஏரி

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள கீழ்க்கட்டளை ஏரி ரூ. 1.6 கோடியில் புதுப் பொலிவு பெற உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் சந்திப்புக்கு முன்னர் அமைந்துள்ளது கீழ்க்கட்டளை ஏரி.

பல்லாவரம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை உள்வாங்கி சேமித்து அதன் பிறகு உபரியாகும் நீர் பள்ளிக்கரனைக்கு செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

ரூ. 1.6 கோடி...:

இந்த நிலையில், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (என்.எல்.சி.பி.) கீழ் தமிழகத்தில் கீழ்க்கட்டளை ஏரி உள்பட 3 ஏரிகளை சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை இதற்கான திட்டத்தை ரூ. 1.6 கோடி மதிப்பீட்டில் தயாரித்துள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பில் 70 சதவீதத் தொகை மத்திய அரசிடம் இருந்தும், 20 சதவீதம் மாநில அரசிடம் இருந்தும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்தும் பெறப்படும்.

முள்கம்பி வேலி...:

இந்த திட்டத்தின்படி 56 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் கண்டறியப்பட்டு முள்கம்பி வேலி போடப்படும்.

இதனால் ஏரிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து மாசுப்படுத்துவது, ஆக்கிரமிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். மேலும், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியின் நடுவில் சிறிய அளவிலான தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிக்கான படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

கழிவுநீரை சுத்தப்படுத்த...:

எரிமலைகளில் இருந்து வெளியாகும் ஒருவகை தாதுவை மண்ணுடன் கலந்து ஏரிக்குள் நீர் வரும் பகுதியில் புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏரிக்குள் வரும் போதே கழிவுநீரை சுத்தப்படுத்த முடியும்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதற்கான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை முகமைக்கு பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அமைப்பு பரிசீலனை:

மத்திய அரசின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கண்காணிப்பு அமைப்பான இந்த முகமை மூலம் கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

இந்த திட்டத்துக்கு தனது பங்காக 10 சதவீதத் தொகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்லாவரம் நகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் பங்கு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு கீழ்க்கட்டளை ஏரி சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல புறநகரில் உள்ள மற்ற ஏரிகளையும் சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.