புதன், 5 ஆகஸ்ட், 2009

மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் பராந்தகச் சோழன் சிலை அமைப்பதில் சர்ச்சை


சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் முதலாம் பராந்தகச் சோழனின் சிலை அமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடபழனியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் எதிரில் நிலம் ஒதுக்கப்பட்டு புதிய வளாகம் ரூ. 2.17 கோடியில் கட்டப்பட்டது.



இந்தப் புதிய வளாகத்தைத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிதி அமைச்சர் க. அன்பழகன் கடந்த ஜூன் 19-ம் தேதி திறந்து வைத்தார்.



அதிமுக ஆட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம் அமைக்க ஒதுக்கப்பட்ட இந்த இடம் திமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சொந்தக் கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்டது.



உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் இப்போதைய நடைமுறைக்கு முன்னோடியாக உள்ள குடவோலை முறை குறித்தச் செய்திகள் முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.



எனவே புதிய வளாக நுழைவாயிலில், முதலாம் பராந்தகச் சோழன் மற்றும் குடவோலை முறை குறித்த சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அவ்விதம் சிலை அமைப்பதற்கு முன்னதாகவே புதிய வளாகத்துக்கான திறப்பு விழா நடைபெற்றது. இருப்பினும், புதிய வளாகத்தின் சுற்றுச்சுவரில் சிலை வைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசு ரூ. 6 லட்சத்தை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது.



உருவ மாதிரி கிடைக்கவில்லை



இந்தச் சிலை வைப்பதற்காக முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரியைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேடினர். அரசு ஆவணக் காப்பகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதற்கான தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



ஆனால், முதலாம் பராந்தகச் சோழனின் உருவ மாதிரி எங்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜராஜ சோழன் உள்ளிட்ட சில சோழ மன்னர்களின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாம் பராந்தகச் சோழனின் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலரின் மூலம் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.



விலை அதிகம்



""மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அடிப்படையில், அங்கு வைக்கப்படுவதற்காக உருவாக்கப்படும் சிலைக்கு மொத்தச் செலவு அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டாது'' என இது போன்ற சிற்பங்களை உருவாக்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆனால், அரசு இதற்கு ஒதுக்கியுள்ள ரூ. 6 லட்சம் சிலைக்காக முழுமையாக செலவிடப்பட்டதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆணையருக்கும் சில உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக சிலர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஆணைய ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.



வரலாற்று ஆசிரியர்கள்



முதலாம் பராந்தகச் சோழன் கி.பி. 907-ம் ஆண்டு முதல் கி.பி. 953-ம் ஆண்டு வரை ஆட்சிப் புரிந்தார். களபிரரை முறியடித்து கி.பி. 575-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசை கி.பி. 915-ல் முறியடித்து மதுரையை வென்றவர் முதலாம் பராந்தகச் சோழன்.



உத்தரமேரூர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள குடவோலை முறையில் அதிகாரிகளே (வாரியத் தலைவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் இது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை அல்ல எனவும் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.



இது தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறையின் 1904-05 ஆண்டு அறிக்கையில், (பக்கம் 136, 138) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.



இத்தகைய சூழலில், உருவ மாதிரி குறித்த உறுதியான ஆவணங்களின் அடிப்படை இல்லாமல் பராந்தகச் சோழன் என்று கூறி ஒரு சிலையை உருவாக்கி முக்கியமான ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் மக்களிடம் தவறான தகவல் பரவ வழிவகுத்துவிடக்கூடாது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக